வாசன் வருவாரா.. அவர் வேற கூப்பிடறாரா.. "டைம்" தந்த பாஜக.. என்ன நடக்கிறது தமிழக அரசியலில்?
ஜிகே வாசனுக்கு முக்கிய கோரிக்கையை கேஎஸ் அழகிரி விடுத்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது
மதுரை: தமாகா தலைவர் ஜி.கே. வாசனை மறுபடியும் காங்கிரசுக்கு அழைக்கிறோம்... அவருக்கு கீழ்பணியாற்றவும் என்னைப் போன்றவர்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளது பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
கூடிய சீக்கிரம் பாஜகவுக்கு வந்துவிட வேண்டும் என்று ஜிகே வாசனுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளதாம்.. அதாவது, பாஜகவுக்கு நெருக்கமானவராக வாசன் கருதப்பட்டு வந்தாலும், தமாகாவை தனித்தே இயக்கி வருகிறார்..
எனினும் கடந்த சில வருடங்களாகவே, "உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள்" என்று பாஜக மேலிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், வாசன் அதற்கு செவிசாய்க்கவில்லை..

ஜிகே வாசன்
3, 4 முறை இதே கோரிக்கையை வாசன் நிராகரித்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு இதே கோரிக்கையை பாஜக மேலிடம் வைத்துள்ளது. ஆனால், இந்த முறை சற்று யோசித்த வாசன், கட்சியினரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று கூறியிருந்தாலும், பாஜகவில் இணையப்போவதில்லை என்று திட்டவட்டமாக வாசன் முன்பே தெரிவித்திருந்தார்.. எனினும், பாஜக மேலிடம் மறுபடியும் வாசனுக்கு கோரிக்கை விடுத்து வருவதாக தெரிகிறது.. கடந்த 4 நாட்களுக்கு முன்பு, பாஜக தலைவர் நட்டா, அமித் ஷா, பிரதமர் மோடி என 3 பேரையுமே வாசன் சந்தித்து பேசியிருந்தார்..

டைம் தந்த பாஜக
அப்போது, "கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு பாஜகவுக்கு வந்துவிடுங்கள்.. கட்சிக்குள் வந்துவிட்டால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உங்களை மத்திய அமைச்சராக்குவது எங்கள் பொறுப்பு" என்றார்களாம். அதற்கு வாசன், கட்சி நிர்வாகிகளை மறுபடியும் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்றாராம். உடனே அவர்கள், தாராளமாக பேசுங்கள்.. ஆனால், டிசம்பர் மாதத்துக்குள் நீங்கள் பாஜகவுக்குள் வந்துவிடவேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம்.. வாசனை ராஜ்ய சபாவுக்கு அனுப்பியபோதே, அவரை கட்சிக்குள் இழுத்துப்போடும் பிளானில் பாஜக உள்ளதாக அப்போதே தகவல்கள் வெளியானது..

மதவாத கட்சி
ஆனால், மூப்பனார் மகன் அதற்கெல்லாம் உடன்படமாட்டார்.. காங்கிரஸ் பாரம்பர்யத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், மதவாதக் கட்சியான பாஜகவில் சேருவதா?" என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி அப்போதே தன்னுடைய எதிர்ப்பையும் வலுவாக காட்டியிருந்தார்.. இப்போது வாசனை பாஜக தங்கள் கட்சிக்கு அழைத்து வரும்நிலையில், கேஎஸ் அழகிரி, வாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.. மதுரையில் தமாகா, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

மூப்பனார்
அப்போது, "ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று தவறாக பேசினார் என பாஜக குற்றம் சாட்டுகிறது. ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. அதானியை பற்றி பேசுவது தவறா? அவர் குறித்து பேசினால் தேச துரோகமா? நாட்டில் தனி மனிதர் வியாபாரம் செய்வதை நாம் எதிர்ப்பதில்லை. அதற்கான உரிமை உண்டு. சட்டமும் அனுமதிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளுக்கு உதவி செய்கின்றன. ஏன் செய்கிறார்கள் என கேள்வி கேட்கக் கூடாதா? அதானியை குற்றம் சாட்டினால் இந்தியாவை குற்றம் சாட்டுவதாக சித்தரிப்பது தவறு.. திமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்..

உடைந்த கண்ணாடி
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடி..காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஜி.கே. மூப்பனார் போன்ற பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய வரலாறு உண்டு. தமாகா இப்போது கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படுகிறது. ஜிகே வாசன் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினால் அவருக்குக் கீழ்பணியாற்றத் தயாராக இருக்கிறோம்" என்றார். அழகிரியின் இந்த அழைப்பு காங்கிரசுக்குள் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.. அதிமுக - பாஜக இடையே தொடர்ந்து விரிசல் வந்துள்ள நிலையில், அந்த கூட்டணியை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் வாசன் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.. அத்துடன், பாஜகவிலும் விடாமல் அழைப்பு வந்துள்ள நிலையில்தான், அழகிரி இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார்..!!












Click it and Unblock the Notifications