யார் இந்த மூர்த்தி? மதுரை கிழக்கில் சூரியன் உதிக்குமா? உதய் கை ஓங்குமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தெற்கிலுள்ள 10 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை ஸ்டாலின் மூர்த்தி கையில் ஒப்படைத்துள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் கேட்கின்றன. அவர் வெல்வாரா? மதுரை கிழக்கில் உதயசூரியன் உதிக்குமா?

ஒரு காலத்தில் மதுரை திமுகவின் முகமாக இருந்தவர் மு.க.அழகிரி. அவரை மீறி யாரும் தென்மாவட்டங்களில் தலைதூக்க முடியாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அந்தக் கோட்டைக்குள் முதல் ஓட்டையைப் போட்டவர்தான் வணிக வரிகள் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி.

DMK

திமுக முதல் குடும்பத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருபவர். இவரைத் துருப்புச் சீட்டாக வைத்துத்தான் அண்ணன் அழகிரி அரசியல் அஸ்தமிக்கச் செய்தார் மு.க.ஸ்டாலின். அன்று முதல் இன்று வரை அசைக்க முடியாத அதிகாரம் மிக்க அரசியல்வாதியாக வலம் வருபவர்.

சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்த மூர்த்தி சத்திரப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதற்கு மேல் படிக்கவில்லை. காரணம், வறுமை. சின்ன சின்ன சில்லறை வேலைகளைச் செய்துவந்த அவர், தேங்காய் வியாபாரியாக உருவெடுத்தார். அழகிரி நிழலில் அரசியல் பழகிய அவர், அவரையே விழுங்கிவிடும் அளவுக்கு பெரும் செல்வாக்கு கொண்டவராக மாறினார்.

முதலில் ஸ்டாலின் நட்பு வட்டத்திலிருந்த மூர்த்தி, காலப்போக்கில் உதயநிதியின் அன்பு வட்டத்திற்குள் புகுந்தார். அதனால் அமைச்சராகும் அளவு யோகம் உண்டானது. மதுரை கிழக்குத் தொகுதியில் 2 முறை வென்று காட்டியவர் மூர்த்தி. அவரைப் போல் தேர்தல் வேலை பார்க்க ஆளே கிடையாது என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தொண்டர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். மதுரைக் கிழக்கு தொகுதியில் மொத்தம் 3,30,993 வாக்காளர்கள் உள்ளனர்.

பலரும் மதுரை கிழக்கு தொகுதி என்றால் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாக ஒரு நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், இத்தொகுதியில் அச்சமூகத்தினர் பெரும்பான்மையாக இல்லை. அவர்களைவிட அதிகமாக உள்ளவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். ஆனால், அதில் பல உட்பிரிவுகள் உள்ளன. எனவே அச்சமூகத்தின் ஓட்டுகள் மொத்தமாக இல்லாமல் சிதறிக் கிடக்கின்றன.

அடுத்ததாகப் பார்த்தால் யாதவர்கள் மிகுதியாக உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கிதான் வெற்றியை இறுதிசெய்கிறது. மூர்த்தி முத்தரையர் சமூகத்தின் ஒரு பிரிவில் வருகிறார். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மதுரை கிழக்கில் ஒரு சில ஊர்களில் மட்டுமே வசிக்கின்றனர். மீதமுள்ள பல இடங்களில் அவர்களின் ஆதிக்கம் குறைவு.

பட்டியலின மக்களின் வாக்குகள் சுமார் 48 ஆயிரம் வரை உள்ளது. அந்த மக்களில் பலர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. காரணம், திமுக கூட்டணியில் விசிக உள்ளது. மதுரைதான் விசிகவின் தாய் மண். அங்கே மீண்டும் இம்முறை புத்துயிர் பெற்றுள்ளது அக்கட்சி. கூடவே இடதுசாரி கட்சிகளும் இணைந்துள்ளன. தேமுதிகவின் பலமும் திமுக பக்கம் சேர்ந்துள்ளது.

இவை போக அருந்ததியர் மக்களும் உள்ளனர். அம்பலக் கள்ளர்களின் வாக்குகள் 71 ஆயிரம் வரை உள்ளது. பிறசாதியினர்தான் பெரும்பான்மை. சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். மதுரை கிழக்கு தொகுதி என்பது பழைய சமயநல்லூர் தொகுதியாகும். அதுவே தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் மதுரை கிழக்கு என மாறியது.

1977 மற்றும் 80 ஆகிய தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கரய்யா நின்று வெற்றி பெற்ற தொகுதி. இந்தத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நன்மாறன், மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். மக்களோடு மக்களாக அரசுப் பேருந்தில் சென்றவர். அவரது தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பி.மூர்த்திதான் இந்த திமுக ஆட்சியில் தன் மகனுக்கு 150 கோடியில் கல்யாணம் செய்து வைத்தார்.

அந்தக் கல்யாணத்தில் 5 ஆயிரம் ஆடுகள் 5 கோழிகள் விருந்துக்காக வெட்டப்பட்டன என ஊடகங்களில் செய்தி வெளியானது. இவ்வளவு செல்வாக்கு கொண்ட மூர்த்தி 2011இல் தொகுதியில் தோல்வியையும் தழுவியுள்ளார். இந்த 2026 தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராகக் களம் கண்டுள்ள மாங்குளம் மகேந்திரனே, மூர்த்தியின் ஆதரவில்தான் சீட்டு வாங்கியுள்ளார் எனத் தொகுதிக்குள் ஒரு பேச்சு நிலவுகிறது.

அதிமுக கட்சியில் திமுக அமைச்சரால் சீட்டு வாங்க முடியுமா? என்றால் அதுதான் அமைச்சரின் செல்வாக்கு என்கிறார்கள் உடன்பிறப்புகள். தவெக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனின் பிரச்சாரம் பெரிதாக இல்லை. முன்னதாக மதுரையில் நடந்த மாநாட்டிற்கு மூர்த்தி சில இடைஞ்சல்களைக் கொடுத்ததாக விமர்சனம் எழுந்தது. அதை உடனடியாக மூர்த்தி மறுத்தார்.

சாதி பெருமை பேசியதாகக் கூட சில கிராமங்களில் மூர்த்திக்கு எதிராகச் சிலர் போராட்டம் செய்தனர். அவரது உருவபொம்மை யை எரித்தனர். அது திரித்துத் தயாரிக்கப்பட்ட வீடியோ என இந்த திமுக அமைச்சர் மறுத்தார். எனவே மூர்த்திக்கு எந்தளவுக்குச் செல்வாக்கு உள்ளதோ அதில் கால்வாசி எதிர்ப்பும் உள்ளது.

சில சில ஓட்டைகள் இருந்தாலும், மூர்த்தி பலமான வேட்பாளராக இருக்கிறார். அமைச்சராக இருந்த அவரிடம் பணபலமும் உள்ளது. அதை உணர்ந்தே தெற்கில் உள்ள 10 தொகுதிகளின் ஸ்டாலின் இவர் கையில் ஒப்படைத்துள்ளார். பழம் புழங்கும் துறையில் அமைச்சராக வலம் வந்த மூர்த்திக்கு இந்த முறை கூட்டணி பலத்தால் மறுபடியும் யோகம் அடிக்கலாம் என்கிறார். அதற்கு மற்றொரு காரணம், அதிமுக வேட்பாளர் இன்னும் அதிக உழைத்தால் அதை முறியடிக்கலாம் என்றும் தொகுதிவாசிகள் சொல்கிறார்கள்.

-கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+