மதுரைக்கு வரும் எடப்பாடி.. மக்களோ ஹேப்பி! வேட்டி, சேலையோடு வீடு வீடாகச் சென்று அழைக்கும் அதிமுக!
மதுரை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ' 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரச்சார பயணத்தை தொடங்கி இருக்கிறார். பல மாவட்டங்களை கடந்து அடுத்த மாதம் மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் எடப்பாடி. இதை அடுத்து மதுரையில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்டவற்றை வழங்கி எடப்பாடி பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து வருகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத இடைவெளியே இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தல் வேலைகளை துவங்கி விட்டன. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருவதோடு, ரோட் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
இதேபோல பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. அதே நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தமிழகத்தில் முதன்முறையாக பிரசாரத்தையே தொடங்கினார் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிச்சாமி
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார். கோவையில் தொடங்கிய அவரது சுற்றுப்பயணம் விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் எடப்பாடி. இதற்காக அதிமுகவினர் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
அதிமுக பிரச்சாரம்
இதுவரை நடந்த பிரசார கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருப்பது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில், தங்கள் மாவட்டங்களிலும் அதேபோல கூட்டத்தை கூட்ட வேண்டும் என தீவிரம் காட்டி வருகின்றனர் நிர்வாகிகள். அந்த வகையில் மதுரையில் 10 தொகுதிகளில் செப்டம்பர் முதல் வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் தற்போதைய அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏற்பாடுகளை துவக்கி விட்டனர்.
மதுரை கூட்டம்
அந்த வகையில் மதுரை அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு, முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளில் ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதியை பொருத்தவரை முன்னாள் எம்எல்ஏவும் தற்போது அதிமுக மருத்துவர் அணி மாநில இணை செயலாளராக இருக்கும் டாக்டர் சரவணன் மீண்டும் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கள் பகுதியில் மக்களை திரட்டி வர வேண்டும் என்பதற்காக வீடு வீடாகச் சென்று வேட்டி சேலை ஆகியவற்றை தாம்பூலத்தோடு வைத்து அழைப்பு விடுத்து வருகிறார்.
ஏற்பாடுகள் தீவிரம்
மேலும் அதிமுக சாதனைகள் குறித்து எடுத்துரைத்து கூட்டத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதே போல அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். மதுரையில் மாஸ் காட்டவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கும் நிலையில் தற்போதைய அதற்கான ஏற்பாடுகள் சூடு பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications