கையில் மாலையுடன் ஓடிவந்த சிறுவன்.. யாருமே எதிர்பார்க்காத செயலை செய்த அண்ணாமலை!
மதுரை: கையில் மாலையுடன் வந்த சிறுவன் அணிவிக்க முயன்ற போது சட்டென நிறுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்,என் மக்கள்' யாத்திரை சென்று வருகிறார். கடந்த ஜூலை 28-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ராமேசுவரத்தில் இந்த யாத்திரை தொடங்கி வைக்கப்பட்டது,.

அண்ணாமலையின் இந்த யாத்திரை ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையிலும் நடந்து வருகிறது. முதல்கட்டமாக 200 நாட்களுக்கு யாத்திரையை நடத்தப்படுகிறது. இதில் அண்ணாமலையுடன் பயணிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் தொடங்கிய 'என் மண்,என் மக்கள்' யாத்திரை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் நடந்தது. தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் யாத்திரை நடந்தது. காரைக்குடி, மானாமதுரை, மேலூரை கடந்து இந்த யாத்திரை இன்று மதுரைக்கு வந்துள்ளது.
மதுரையில் யாத்திரை மேற்கொண்ட போது, கையில் மாலையுடன் வந்த சிறுவன் அணிவிக்க முயன்ற போது சட்டென நிறுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த மாலையை அவருக்கே அணிவித்தார். தலையை தட்டிக்கொடுத்தார். இதனை பார்த்து பலரும் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் யாத்திரை நடந்த போது, காரைக்குடி செக்காலை சாலை பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய இளைஞர் ஒருவர் "குர்-ஆன்" பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார். உடனே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரானை கண்ணில் வைத்து ஒத்திக்கொண்டார். இந்த வீடியோவும் வேகமாக பரவி விவாதத்தை ஏற்படுத்தியது.
இன்று அண்ணாமலை மதுரையில் யாத்திரை மேற்கொண்டார். மேலூர் தொடங்கி மதுரையின் முக்கிய பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டார். அப்போது ஒரு மூதாட்டி கோரிக்கை அடங்கிய மனுவை அண்ணாமலையிடம் கொடுத்தார். அதனை பார்த்த அவர் உரிய நடவடிக்கைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். மதுரையில் அண்ணாமலையை நாட்டுப்புற கலைஞர்களின் ஆட்டம் பாட்டமுமாய், உறுமி மேளத்துடன் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications