ஓபிஎஸ்ஸுக்கு வீடியோவில் கண்டனம் தெரிவித்த பெண் நிர்வாகி.. அதிமுகவில் ஷாக்.. என்ன நடந்தது?
மதுரை : எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான தனக்கு, ஓபிஎஸ் அணியில் பதவி வழங்கியிருப்பதற்கு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பெண் நிர்வாகி தமிழ்ச்செல்வி ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும், மாற்றி மாற்றி எதிரணியின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்து, பதவி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், ஈபிஎஸ் ஆதரவாளர்களை பதவிகளில் நியமனம் செய்வதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகின்றன.
அந்தவகையில், மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகிக்கு, ஓபிஎஸ் தரப்பு புதிதாக பதவி கொடுத்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஓபிஎஸ் vs எடப்பாடி
அதிமுகவி்ல் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

ஓபிஎஸ் அணி
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவரும் மாறி மாறி எதிரணி ஆதரவாளர்களை இழுக்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாற்று அணியில் இருந்து வருபவர்களுக்கு ஓபிஎஸ் அணியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எடப்பாடி அணியில் இருந்து வருபவர்களுக்கு மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து மட்டங்களிலும் பதவி கொடுத்து வருகிறார் ஓபிஎஸ். மேலும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

எதிரணியில் இருக்கும்போதே பதவி
இந்த நிலையில் ஒருபடி மேலே சென்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருக்கும்போதே ஓபிஎஸ் பதவி கொடுப்பதாக பிரச்சனைகள் கிளம்பி இருக்கின்றனர். ஈபிஎஸ் ஆதரவாளராக தொடர்ந்து கொண்டிருக்கும்போது, ஓபிஎஸ் அணி நியமிக்கும் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றதைக் கண்டு எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நியமனத்தால் அதிர்ச்சி
அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில், மதுரை மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், செல்லம்பட்டி ஒன்றிய துணை செயலாளராக உள்ள தமிழ்ச்செல்வி ராமசாமி என்பவர் செல்லம்பட்டி ஒன்றிய துணை செயலாளராக ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த எடப்பாடி அணியினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஈபிஎஸ் ஆதரவாளருக்கு ஓபிஎஸ் அணியில் பதவி
எடப்பாடி பழனிசாமி அணியில் பொறுப்பில் இருக்கும் தமிழ்ச்செல்வி ராமசாமிக்கு, ஓபிஎஸ் அணியில் பதவி வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வி ராமசாமி, தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில், ஆர்பி உதயகுமார் வழியில் செயல்பட்டு வருவதாகவும், தன்னைக் கேட்காமலேயே ஓபிஎஸ் அணியில் தன்னை நிர்வாகியாக அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

ஐயா, வணக்கம்
அந்த வீடியோவில், "ஐயா வணக்கம், நான் செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி ராமசாமி பேசுகிறேன். நான் எப்போதும் எடப்பாடி பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழியிலும், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா வழியிலும் கட்சிப் பொறுப்பில் உள்ளேன். என்னை ஓபிஎஸ் அணியில், செல்லம்பட்டி ஒன்றிய இணை செயலாளராக நியமித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடரும் சம்பவங்கள்
இதேபோல, ஆங்காங்கே நிகழ்வுகள் நடந்தேறி வருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக உள்ள ஜெயராமன், வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து ஜெயராமன், தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் தான் இருப்பதாகவும், தன்னைக் கேட்காமலேயே ஓபிஎஸ் அணியில் பொறுப்பு வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications