தமிழ்வழி கல்வி போலி சான்றிதழ்! அதிகாரி பணியில் சேர்ந்தவர்களுக்கு சிக்கல்..மதுரை கோர்ட் அதிரடி ஆர்டர்
மதுரை: தமிழ்வழிக் கல்வியில் படித்ததாக போலிச்சான்றிதழ் கொடுத்து அதிகாரி பணிகளில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை பாய இருக்கிறது. கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திராவ், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- கடந்த 2019 ஆம் ஆண்டு துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்துத்தேர்வும் எழுதினேன்.

அதன்பின்னர் நேர்முகத்தேர்வுக்கு தேர்வானவர்களின் பட்டியலில் எனது பெயர் இல்லை. தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டு பட்டியலிலும் எனது பெயர் இடம் பெறவில்லை. இது பற்றி கேட்ட போது, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு சலுகை தொலைநிலைக்கல்வியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது.
அவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்பதால், கல்லூரியில் நேரடியாக தமிழ்வழி கல்வியில் படித்தவர்களை அரசுப்பணியிடங்களில் நியமிக்கும்படி வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. இது பற்றிய விசாரணையில் தமிழ்வழிச்சான்றிதழ் வழங்கியதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
ஆனாலும் முறைகேடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "போலிச்சான்றிதழ் பெற்று பணியில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஎன்.பி.எஸ்.சிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது" என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், போலி சான்றிதழ் மூலம் அரசின் உயர் பதவிகளை அடைபவர்கள் லஞ்சம் வாங்காமல் வேறு என்ன செய்வார்கள்? தங்கள் கடமையை சரியாக செய்வார்களா? இவ்வாறு அரசுப்பணியில் சேருபவர்களை கண்டறிந்த உடனே அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். துறைரீதியான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்” என்று கூறினார். இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணைக்கு அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறை கால அவகாசம் கோரியது. இதை ஏற்றுக்கொண்டு வழக்கை 4 வாரத்துக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications