மூக்கை துளைத்து போன அயிலை மீன்.. திருமங்கலம் கண்மாயில் நழுவி, அண்டாவில் விழுந்த கெண்டை.. மதுரை குஷி
மதுரை: 5 வருடங்களுக்கு பிறகு நடந்த திருவிழா என்பதாலோ என்னவோ, மதுரை திருமங்கலம் மக்கள் படுகுஷியில் உள்ளனர்.
நம்முடைய தமிழகத்தில் விநோதமான திருவிழாக்கள் என்பது காலம் காலமாக நடந்துவரும் வழக்கமாகும்.. பெண்கள் மட்டுமே பங்கேற்று சிறப்பிக்கும் விழாக்கள், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேகமாக நடத்தப்படுவதுண்டு.

குறிப்பாக, சித்திரை திருவிழாவின்போது, பல்வேறு கோயில்களில் இதுபோன்ற விநோத நடத்துவது அதிகரிக்கும்.. பெரும்பாலும், ஆடுகள், கோழிகள் பலியிட்டு, நேர்த்திக்கடனாக தங்களது கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்குவார்கள். இந்த லிஸ்ட்டில் மீன்பிடித்திருவிழாக்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் என தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் தற்போது மீன்பிடி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.. இங்குள்ள கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடிப்பது என்பதால், வருடா வருடம் மழை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகவும், ஊர்மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியும், அவரவர் ஊரிலுள்ள கண்மாய்களிலும், ஏரிகளிலும், இந்த மீன்பிடி திருவிழாக்களை நடத்தியிருக்கிறார்கள்.
நெல் அறுவடை: முக்கியமாக, நெல் அறுவடைக்கு பிறகு, கோடைகாலத்தில் இந்த திருவிழா நடத்துவார்கள்.. அதுமட்டுமல்ல, கோடையில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில், ஜாதி, மதம் பாராமல் அனைத்து கிராம மக்களும் ஒன்றாக சேர்ந்து,
நடத்துவதே இந்த மீன்பிடித்திருவிழாக்களின் சிறப்பம்சமாகும்.
அந்தவகையில், மதுரையிலும் மீன்பிடி திருவிழா நடந்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ளது கள்ளிக்குடி ஒன்றியம்.. இங்குள்ள குராயூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் இந்த திருவிழா நடந்துள்ளது.. அதுவும், 5 வருடங்களுக்கு பிறகு இந்த மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
கண்மாய்: இதற்கு காரணம், கண்மாயில் கடந்த 2 மாதங்களாகவே தண்ணீர் இல்லையாம்.. கண்மாயிக்கு அடியில் சிறிது மட்டுமே தண்ணீர் உள்ளது.. ஆனால், இந்த தேங்கிய நீரில் ஏராளமான மீன்கள் இருந்தன... எனவே, குராயூர், மொச்சிகுளம், மருதங்குடி, சென்னம்பட்டி, இலுப்பக்குளம், வேப்பங்குளம், திருமால், ஓடைப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்மாயில் மீன்பிடித்தனர்.
இதற்காக, அதிகாலையிலேயே கையில் மீன்பிடி உபகரணங்களோடு கண்மாய்க்கு திரண்டு வந்துவிட்டார்கள். ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தார்கள்.. சிறுவர் சிறுமி முதல் பெரியோர்கள் வரை கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
மீன்கள்: குறவை, கெளூர், கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. இந்த மீன்களை கரையில் கொண்டு வந்து கொட்டினார்கள்.. பிறகு, கிராம மக்கள், அண்டா அண்டாவாக மீன்களை அள்ளிப் போட்டுக் கொண்டு போனார்கள்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாயில் நீர் இருந்ததால், இந்த வருடம் எதிர்பாராத விதமாக மீன்கள் அதிக அளவில் கிடைத்ததாகவும், 20 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு வேண்டிய மீன்களை அள்ளிக் கொண்டு போனது சந்தோஷமாக உள்ளது என்றும் கிரா மக்கள் பூரித்து சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications