மதுரை நியோமேக்ஸ் நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்த 23,649 பேருக்கு உயர்நீதிமன்றம் குட் நியூஸ்
மதுரை: மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு தென்மாவட்ட மக்கள் பல கோடி பணத்தை முதலீடு செய்தனர். இதில் பணத்தை இழந்ததாக 23,649 பேர் புகார் அளித்தனர். பணத்தை இழந்தவர்களுக்கு திரும்ப வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கமலக்கண்ணன், கபில், வீரசக்தி உள்பட பலர் செயல்பட்டு வந்தார்கள். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதியை நம்பி பல ஆயிரம் கோடிக்கணக்கில் முதலீடு செய்ததாகவும் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணம் மோசடி செய்தது தொடர்பாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏராளமானவர்களை கைது செய்தனர். அவர்களில் சிலர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். இந்தநிலையில் நிதிநிறுவன மோசடி வழக்கில் சிக்கியவர்களை ஜாமீனில் விடுவித்ததற்கு எதிராக நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தவர்களை ஜாமீனில் விடுவித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்கள். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி குறித்து 23 ஆயிரத்து 649 முதலீட்டாளர்கள் புகார் அளித்து உள்ளனர். அவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் செலுத்திய முதலீட்டுக்கு பதிலாக பணமாகவோ, நிலமாகவோ பெற சம்மதம் தெரிவிப்பது அவசியம் என கூறினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, நியோமேக்ஸ் நிறுவனத்தின் பெயரில் உள்ள நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப நிலமாகவோ, பணமாகவோ திரும்ப பெற தயாராக இருக்கிறார்கள். எனவே, நியோமேக்ஸ் சொத்துக்களை பிரித்து கொடுக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட இருக்கிறது.
முதலீட்டாளர்களின் பணம் அவரவர்க்கு விரைவில் திரும்ப கிடைக்கும் வகையில், இந்த குழு செயல்படும். இது குறித்த ஆலோசனைகளை, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications