பழைய ஓய்வூதியம் கேட்ட அரசு ஊழியர்கள்.. அரசாணை வரை காத்திருக்க வேண்டும்.. மதுரை ஐகோர்டில் அதிரடி
மதுரை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட அரசாணை பிறப்பிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும், அதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட கோரிய வழக்கை முடிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கை தொடர்ந்த அரசு ஊழியர்கள் முறையிட்டுள்ளனர். முன்னதாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரடெரிக் ஏங்கெல்ஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2012ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் இதுநாள் வரை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. மத்திய அரசு 2013-ல் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைத்து உள்ளது. தமிழ்நாடு இதனை பின்பற்றவில்லை.

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுனர் குழு அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசாணையோ, விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை. இதனால் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் பலர் தவிக்கின்றனர். எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கலைமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தமிழக அரசு தற்போது பழைய ஓய்வூதிய திட்ட அடிப்படையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. எனவே இந்த வழக்கை முடித்து வைக்கலாமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, இது தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் வரை இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் என்றார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தமிழக அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் விவரம்:
* மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
* 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
* ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
* அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
* புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
* பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (சி.பி.சி.) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு ரூ.13 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.11 ஆயிரம் கோடியை அரசின் பங்களிப்பாக தர வேண்டும்.












Click it and Unblock the Notifications