மதுரை மாணவன் கடத்தல் வழக்கு! மனைவி சூர்யாவின் உடலை வாங்க குஜராத் ஐஏஎஸ் அதிகாரி மறுப்பு
மதுரை: மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புப்படுத்தி பேசப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை செய்த விவகாரத்தில் அவருடைய தற்கொலை கடிதம் சிக்கியது. இந்த நிலையில் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவருடைய கணவர் ரஞ்சித்குமாரிடம் ஒப்படைத்த போது அவர் உடலை வாங்க மறுத்துவிட்டார்.
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் சொந்தமாக வணிக வளாகம், வீடு ஆகிய சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய மகன் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியோடு சேர்ந்து கத்தி முனையில் ஒரு கும்பல் கடத்தியது.

இந்த நிலையில் சிறுவனின் தாயை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல், " ரூ 2 கோடி கொடுத்தால் உன் மகனை விட்டு விடுகிறோம். போலீஸுக்கு போனால் உன் மகனை உயிருடன் பார்க்க முடியாது என மிரட்டினர். இது தொடர்பான ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் சிறுவனின் தாயார் ராஜலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில் கடத்தல்காரர்களை போலீஸார் தேடி வந்தனர். அப்போது செல்போன் டவர் மூலம் கடத்தல் கும்பலை காவல் துறையினர் கண்டுபிடித்து விரட்டினர்.
இதையடுத்து போலீஸ் விரட்டுவதை அறிந்த கடத்தல் கும்பல் சிறுவனை விட்டுவிட்டு தப்பியோடினர். இதையடுத்து கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் சிறுவனம் மீட்கப்பட்டார். இந்த நிலையில் கடத்தல் கும்பலை சேர்ந்த தேனி மாவட்டம் முன்னாள் காவலர் செந்தில்குமார், திருநெல்வேலி மாவட்டம் ரஹ்மான்பேட்டையை சேர்ந்த அப்துல் காதர், தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வீரமணி, காளிராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையிஸ் இந்த கடத்தல் சம்பவத்தில் குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் பிரபல ரவுடி மகாராஜா ஆகியோரையும் போலீஸார் தேடி வந்த நிலையில் கணவர் ரஞ்சித்துடன் சேர்ந்து வாழ சூர்யா விரும்பியதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சூர்யா மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
விசாரணையில் சூர்யா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக சூர்யா குஜராத்தில் வசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அண்மையில் கூட அவரை விவாகரத்து செய்வதாக அவருடைய கணவர் தெரிவித்திருந்தாராம்.
சூர்யாவுக்கும் மாணவரின் தாய் ராஜலட்சுமிக்கும் இடையே காம்ப்ளக்ஸ் கட்டுவதில் ஏதோ பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. அதனால் அவர் அந்த மாணவனை , ரவுடி மகாராஜாவை வைத்து கடத்தியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சூர்யா தற்கொலை குறித்து போலீஸார் ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கும் சிறுவன் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை ராஜலட்சுமி இந்த விவகாரத்தில் ஏன் தொடர்புபடுத்தினார் என தெரியவில்லை. இது குறித்து முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் குஜராத்தில் பிரேத பரிசோதனை செய்த பிறகு சூர்யாவின் உடலை அவருடைய கணவர் ரஞ்சித் குமாரிடம் ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்தனர். ஆனால் அவர் உடலை வாங்க மறுத்துவிட்டார். இதையடுத்து சூர்யாவின் உடல் அவருடைய சொந்த ஊரான மதுரைக்கு வந்தது.












Click it and Unblock the Notifications