பதறிய பரமக்குடி..9ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்! மறத்தமிழர் சேனை தலைவர் ஜாமீன் தள்ளுபடி
மதுரை: 9 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைதான மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் மாநிலத்தையே நடுநடுங்க வைத்து இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் சிறுமிகளிடம்போய் எப்படி இவர்களால் இதுபோன்று நடக்க முடிகிறது என்று சிந்துத்துக்கூட பார்க்க முடியவில்லை. 15 வயதான சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமைகக்கு ஆளாக்கப்பட்டு வந்து உள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய எளிய குடும்ப பின்னணி கொண்ட அந்த சிறுமியை ஒரு மாத காலமாக நரக வேதனைக்கு ஆளாக்கி உள்ளது அரசியல் பின்புலம் கொண்ட கும்பல்.

சிறுமியை பள்ளிக்குச் செல்லவிடாமல் கடத்திச் சென்று அவர்கள் கூட்டு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கும் தகவல் ராமநாதபுரம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனக்கு நேர்ந்த கொடூரங்களை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க துடிதுடித்து போயின பெற்ற உள்ளங்கள். யார் இத்தகை கொடூரத்தில் ஈடுபட்டது என விசாரிக்கும்போதுதான் அப்பகுதியின் முக்கிய அரசியல் புள்ளிகளில் இந்த மிருகத்தனமான காரியத்தை செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
பரமக்குடி நகராட்சியின் 3 வது வார்டு கவுன்சிலரும், அதிமுக அவைத்தலைவர் மற்றும் பரமக்குடி நகர்மன்ற உறுப்பினருமான 44 வயதான சிகாமணி இந்த கொடூரத்தில் முக்கிய புள்ளியாக இருந்துள்ளார் என்ற தகவலறிந்து கொந்தளித்து இருக்கிறார்கள் பரமக்குடி மக்கள். அவருடன் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகர், ராஜா ஆகியோர் தன்னை துன்புறுத்தியதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் காவல் நிலையத்துக்கு விரைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சட்டம் தன் கடமையை செய்தது. மூவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மாநில அளவில் இந்த பிரச்சனை பூதாகரமானதை அடுத்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் சிகாமணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மறுபக்கம் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரும் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பாக அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பு இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இதனை அடுத்து மனுதாரர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவரது ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications