மதுரையில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை...பல மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில் இடி மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. சூறைக்காற்று வீசியதால் மின்கம்பங்கள் சாய்ந்தன. டி. கல்லுப்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் 15 மணிநேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை: பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு நேரத்தில் இடியும் மின்னலுமாய் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் கிராம மக்கள் இருளில் சிக்கித்தவித்தனர். சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால் 15 மணிநேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திர காலம் முடிந்த பின்னரும் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது. வெப்பச்சலனத்தினால் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது.

இடி மின்னலுடன் மழை
மதுரை மாநகர் மற்றம் அதன் சுற்றுப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் குறைந்து குளுமை நிலவியது. திருமங்கலம், டி. குண்ணத்தூர். டி. கல்லுப்பட்டியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் வேறோடு சாய்ந்தன.

இருளில் மூழ்கிய கிராமங்கள்
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விடிய விடிய மக்கள் இருளில் அவதிப்பட்டனர். அதிகாலை 4 மணிக்கு வந்த மின்சாரம் மீண்டும் தடைபட்டது. 15 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பகல் நேரங்களில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை
இதே போல தென்மேற்குப் பருவமழை வால்பாறையில் ஜோராக தொடங்கியுள்ளது. இடியும் மின்னலுமாய் பெய்த கனமழையால் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டு குறித்த நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளக்காடான குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. ஏற்கெனவே மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகி இயல்புநிலை திரும்ப சில வாரங்கள் ஆனது. தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. நேற்றிரவு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

ஆறுகளில் வெள்ளம்
விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகி வரும் நிலையில், இந்த மழையை விவசாயிகள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

மாறிய வானிலை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்த பிறகும் கடந்த 2 நாட்களாக 100 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயில் கொளுத்தியது. நேற்றிரவு சாரலாக தொடங்கிய மழை சற்று நேரத்தில் வலுத்தது. பின்னர் வலுத்தும், மிதமாகவும் சுமார் 2 மணி நேரம் இந்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது. இன்றும் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications