யாரா இருந்தாலும் ஆம்புலன்ஸுக்கு வழி விடணும்.. எடப்பாடி கூட்டத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்த ஐகோர்ட்!
மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர் தாக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையில், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கதக்கது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது 108 ஆம்புலன்ஸ் சென்றது. நோயாளி இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் வெறும் வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிக்கொண்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் ஆம்புலன்ஸ்
இனி நான் பிரச்சாரம் செய்யும்போது ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் அதே ஆம்புலன்ஸில் நோயாளியாக போவார் என மிரட்டல் விடுத்த நிலையில் அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் துறையூரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளரான கர்ப்பிணி பெண் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்திற்குப், பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்தச் சூழலில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு
மதுரையைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.08.2025 வேலூர் மாவட்டத்தில்'மக்களை காப்போம்' பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இரவு 9.45 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர், அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சந்திரா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு கூட்டம் நடைபெற்ற இடத்தை கடந்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸை பார்த்து, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார் என பகிரங்மாக மிரட்டினார். இந்த மிரட்டல் தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 108 ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஐகோர்ட் கிளை விசாரணை
எனவே 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்த பட்சம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரையாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரி இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கண்டனம்
அரசு தரப்பில், திருச்சியில் ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், "ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், சமூக அமைப்பாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும்.
பொதுக் கூட்டங்களில் மக்கள் அதிகமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட வேண்டும். அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமா? ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் வழிமறித்து தாக்கினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்தனர். மேலும், ஆம்புலன்ஸ் பணியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி தமிழக காவல்துறை டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட் கிளை நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர் .












Click it and Unblock the Notifications