மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால்.. அரசு நடவடிக்கை பாயும்.. பள்ளிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
மதுரை: 9 முதல் +2 வரை பயிலும் மாணவர்களைப் பள்ளிக்கு நேரடியாக வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல்வஹாபுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்அப்துல்வஹாபுதீன் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாகப் பள்ளிக்குச் செல்ல தடை கோரியிருந்தார்.

பொதுநல வழக்கு
அப்துல்வஹாபுதீன் தாக்கல் செய்த அந்த மனுவில், "தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், அடுத்து வரும் கொரோனா 3ஆம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

கட்டாயப்படுத்துகின்றனர்
இந்தச் சூழலில், சில பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர். இன்னும் சில பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படுவது இல்லை. பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பால் மாணவர்களின் கற்பித்தல் பாதிக்கும் எனக் கருதி நேரடி வகுப்பிற்கு மாணவர்களை அனுப்புகின்றனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதால், சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

தடை விதிக்க வேண்டும்
எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல இடைக்காலத் தடை விதிப்பதோடு, இது குறித்த வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கும் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வாதம்
வழக்கு விசாரணையின் போது, பள்ளிகள் திறந்து சில வாரத்திலேயே மாநிலத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பல பள்ளிகள் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்கும்
இதைக் கேட்ட நீதிபதிகள், மாணவர்களைப் பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்த தகவல்களை மனுதாரர் அளித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

என்ன காரணம்
கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியது முதலே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இடையில் கொரோனா கட்டுக்குள் வந்த சமயத்தில் சில காலம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இருப்பினும், நீண்ட காலம் ஆன்லைன் கல்வி என்பது மாணவர்களை மன ரீதியாகப் பாதிக்கும் என்பதால் விரைவில் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி மாநிலத்தில் கடந்த செப். 1ஆம் தேதி முதல் 9 முதல் +2 மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications