சாதி பெயர்களை நீக்கும் அரசாணையை செயல்படுத்துவதில் இறுதி முடிவு எடுக்கக்கூடாது - ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்ட அரசாணையை செயல்படுத்துவதில் இறுதி முடிவு எடுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தெருக்களுக்கு வைக்கப்பட்ட சாதிப்பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில் கள ஆய்வு மட்டுமே நடத்த வேண்டும்; அதற்கு மேல் இந்த அரசாணையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஊர் பெயர்கள், தெருக்களின் பெயரில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பின்படி குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது.
அதன்படி, மறு பெயரிடுவது தொடர்பாக கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சிகளில் செயல் அலுவலர் மற்றும் ஆணையர்கள் பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்றும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத்தன்மையின் அடிப்படையில் கவனமாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்பட்ட பெயர்களை மாவட்ட அரசிதழில் வெளியிட்டு ஆட்சேபனைகளை தெரிவிக்க 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். தன்பிறகு அரசின் அனுமதி கிடைத்த உடன் பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை எல்லாம் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் முடித்து மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதிய ரீதியான பெயர்களை நீக்கி சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டத்தக்கது என்றும் ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. அதேசமயம், சாதியப் பெயர்களை மாற்றுவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்று கூறி, சாதி பெயர்கள் நீக்குவது குறித்து கருத்து கேட்பு, ஆய்வுகள் மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெயர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பம் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications