“ஹோலி கொண்டாட விடல.. தமிழக நோயாளிகள் இந்தி கத்துக்கணும்!” மதுரை எய்ம்ஸின் வடமாநில மாணவர்கள் சர்ச்சை
மதுரை: கட்டி முடிக்காத மதுரை எய்ம்ஸ் பெயரால் சேர்க்கப்பட்ட இந்தி பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் தமிழக நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு பெரும் விமர்சனங்களை கிளப்பி வருகிறது.
கடந்த 2015-16 மத்திய அரசின் பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதாக பாஜக மிகவும் பெருமையுடன் அறிவித்தது. இந்த அறிவிப்பு முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் சொல்லிக்கொள்ளும்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் 2019 தேர்தலுக்கு முன்பு, பிரதமர் மோடி இறுதியாக மிகவும் பிரமாண்டமாக விளம்பரம் செய்து மதுரைக்கே வந்து எய்ம்ஸ் அடிக்கல் நாட்டினார். இப்போது மேலும் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனாலும் மருத்துவமனையை கட்டும் பணிகள் வேகமெடுத்ததாக தெரியவில்லை.

இது கடும் விவாதங்களை கிளப்பி வருகிறது. “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து, பிரதமர் விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி தற்காலிக வளாகத்தில் செயல்பட்டுவருகிறார்கள். ஐந்து மாணவர்கள் ஒரு அறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். புறநோயாளிகள் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை அரங்குகளுக்குச் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும் நூலகங்களில் முதல் ஆண்டு மாணவர்களுக்கான புத்தகங்கள் மட்டுமே உள்ளன. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்குக் அளித்த முதன்மையான மருத்துவ நிறுவனம் இதுதானா? மதுரையில் உண்மையிலேயே எய்ம்ஸ் கட்டி முடிக்க எத்தனை தேர்தல்கள் ஆகும்?” என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. தற்போது வரை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் கொஞ்ச நாள் சென்றால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்காமலேயே முதல் பேட்ச் மாணவர்கள் மருத்துவர்களாக தேர்வாகிவிடுவார்கள் போலிருக்கிறது.
இப்படி இருக்கையில், கட்டி முடிக்காத மதுரை எய்ம்ஸ் பெயரால் சேர்க்கப்பட்ட இந்த இந்தி பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். மேலும் தங்களை ஹோலி கூட கொண்டாட அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. போதுமான இடவசதி, பேராசிரியர்கள், பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி, தங்களை வேறு எய்ம்ஸ் கல்லூரிக்கு மாற்ற வேண்டும் அல்லது ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று இம்மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அப்போது பேட்டியளித்த அவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
ஏற்கெனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இப்படி இருக்கையில், வடமாநில மாணவர்கள் மருத்துவம் பயில தமிழ்நாட்டில் இடம் கொடுத்தால், அவர்கள் நம் மக்களை இந்தி கற்றுக்கொள்ள சொல்கிறார்களே என்று பல்வேறு தரப்பினரும் சோஷியல் மீடியாக்களில் கொந்தளித்துள்ளனர்.
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சிந்தன் கூறுகையில், “கட்டி முடிக்காத மதுரை எய்ம்ஸ் பெயரால் சேர்க்கப்பட்ட இந்த இந்தி பேசும் மாணவர்களின் பேட்டி பரிதாபமாக உள்ளது. இந்தியில் பேசும் நோயாளர் வேண்டும் என கேட்கிறார்கள். அவர்களை அங்கேயே அனுப்பிவிட்டால் நல்லதுதான். மாணவர் சேர்க்கையை மாநிலத்திடம் விட்டுவிடுங்கள்” என தனது x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல சுமந்த் சி ராமன் கூறுகையில், “போதிய வசதிகள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தமிழக நோயாளிகள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா?” என்று என்று மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications