ஈரக்குலையே நடுங்குதே.. பைக்கில் மோதி கவிழ்ந்த கார்.. மதுரையில் 5 பேர் பலியானது எப்படி? ஷாக் வீடியோ
மதுரை: மதுரையில் இன்று காலையில் பைக் மீது மோதிய கார் சாலையின் மறுபுறம் சென்று பல்டியடித்து கவிழ்ந்தது. இதில் காரில் சென்ற 4 பேர், பைக்கில் சென்ற கொய்யாப்பழ வியாபாரி என 5 பேர் பலியாகினர். இந்நிலையில் கோர விபத்து எப்படி நடந்தது? என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இன்று காலையில் பைக்கில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது.

இதனால் பைக் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டது. அதேபோல் காரும் சாலையின் மறுபுறத்துக்கு பறந்து பல்டியடித்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த 4 பேர், பைக்கில் சென்ற கொய்யாப்பழ வியாபாரி என 5 பேர் இறந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரம் மாரியம்மன் கோவில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்று காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தறிகெட்டி ஓடிய கார் கொய்யாப்பழ வியாபாரியின் பைக் மீது மோதியதும், காரில் பயணித்த கனகவேல், அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, உறவினர் நாகஜோதி, ஒரு குழந்தை என 4 பேர் பலியானதும், கொய்யாப்பழ வியாபாரியான பாண்டியும் பலியாகி இருப்பதும் தெரியவந்தது.
இதுபற்றி கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் விபத்து எப்படி நடந்தது? என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவியில் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன்படி கனகவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்த கார் சிவரக்கோட்டை நான்குவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த சாலையின் குறுக்காக ஒருவர் பைக்கில் கடந்து செல்கிறார். கார் வேகமாக வந்ததால் அவர் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுனர் திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் ஒரு ஓரமாக சென்ற கொய்யாப்பழ வியாபாரியின் பைக் மீது மோதுகிறது.
இதில் பைக்கும், பைக்கில் பயணித்தவரும் தூக்கி வீசப்படுகின்றனர். அதோடு அந்த பைக், அதில் பயணித்த நபர் சாலையில் சிறிது தூரம் இழுத்து செல்லப்படுகின்றன. காரும்-பைக்கும் மோதிய இடத்தில் இருந்து பைக் சுமார் 25 அடி தூரத்தில் போய் அந்த நபர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பைக்கும் நொறுங்கி கிடந்தது.
மறுபுறம் கார் சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்பை தாண்டி மறுபுறம் உள்ள ரோட்டை கடந்து இரும்பு தடுப்பில் மோதி சர்வீஸ் ரோடு பகுதியில் தூக்கி வீசப்பட்டு தலைக்குப்புற கவிழ்கிறது. இந்த விபத்து கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக நடந்து விடுகிறது. உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவருகின்றனர். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications