மதுரையில் அளவற்ற அன்பு.. பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி பதிவு.. தூத்துக்குடி, நெல்லையில் பிரம்மாண்டம்
மதுரை: பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் மோடி.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய மோடி, தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் இதயங்களில் பாஜக இருப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி, கடந்த 10 ஆண்டுகளில் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்று சொன்னார். கொள்ளைக்கும்பல், பொய்யர்கள் ஆடும் கபட நாடகத்தை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கூறினார்.
மாலையில் மதுரைக்கு வந்த பிரதமர் மோடி, வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றார். இரவு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து வந்த மோடி ஏலக்காய் மாலை கொடுத்து சாமி தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் குறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என்று பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி. இரவு பசுமலையில் இருந்த தனியார் விடுதியில் தங்கியிருந்த மோடி இன்று காலை தூத்துக்குடிக்கு புறப்பட்டார். கார் மூலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து தூத்துக்குடிக்கு சென்றார் பிரதமர் மோடி.
தூத்துக்குடிக்கு கிளம்பும் முன்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மோடி, பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே அரசு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்குப் பாலத்தை பிரதமர் திறந்துவைக்கிறார். அதனை தொடர்ந்து நெல்லையில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் மோடி.












Click it and Unblock the Notifications