திமுக கூட்டணிக்கு போறீங்களா? சட்டென வந்த கேள்வி.. அன்புமணி சொன்ன பதில்.. எதிர்பாராத ட்விஸ்ட்! ஆஹா
மதுரை: திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதா? என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மதுரையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார். இந்த வேளையில் அவர் யாரும் எதிர்பாராத வகையில் கூறிய பதில் தமிழக அரசியலில் புதிய ட்விஸ்ட்டை ஏற்படுத்தி உள்ளது. அப்படி அவர் என்ன சொன்னார்?.
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் துவங்கி விட்டன. பாமகவும் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலத்தின் பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

அன்புமணியிடம் கேள்வி
இந்நிலையில் தான் மதுரையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ‛‛நீங்கள் தொடர்ச்சியாக திமுக அரசை பாராட்டுவதால் திமுக கூட்டணியில் இணையலாம் என கூறப்படுகிறதே?. திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறதே?'' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார். இதற்கு அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

வித்தியாசம் கிடையாது
எப்படியாவது என் வாயில் இருந்து வார்த்தைகளை எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். நிச்சயமாக எங்களை பொறுத்தமட்டில் நல்லது செய்தால் எந்த அரசையும் வரவேற்போம். பாராட்டு தெரிவிப்போம். கெட்டது செய்தால் கடுமையாக நாங்கள் போராடுவோம். இந்த விஷயத்தில் திமுக, அதிமுக என்ற வித்தியாசம் எங்களுக்கு கிடையாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களை எதிர்த்துள்ளோம். பல திட்டங்களை வரவேற்றுள்ளோம். போராடி உள்ளோம். அதேபோல் தான் திமுக ஆட்சியில் கடுமையாக போராட்டங்களை செய்துள்ளோம்.

அதிமுக, திமுகவுக்கு வரவேற்பு
எங்களை பொறுத்தவரை நன்மை செய்தால் நாங்கள் வரவேற்போம். குறிப்பாக எங்கள் கோரிக்கையான ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என கூறினோம். இதற்கு சட்டம் கொண்டு வந்துள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கூறினோம். அதனை கொண்டு வந்தனர். அதனை வரவேற்றுள்ளோம்.

2 கட்சியும் போதும்
தமிழகத்தை 55 ஆண்டுகாலம் திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. இந்த 2 கட்சிகளும் ஆட்சி செய்தது போதும் என்ற தேக்க நிலை மக்கள் மனதில் வந்துள்ளது. இதனால் அதற்கேற்ப வியூகங்களை வகுத்துள்ளோம். தென்மாவட்டங்களில் கட்சியை வளர்த்து வருகிறோம். நிர்வாகிகளை உற்சாகப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

வேகமாக வளர்ந்து வரும் கட்சி
நாங்கள் எங்களின் வியூகம், யுக்தியில் தெளிவாக இருக்கிறோம். 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். இது எப்படி? என கேட்டால் இப்போது எங்களால் சொல்ல முடியாது. தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக நாங்கள் வளர்ந்து வருகிறோம். தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் உள்ள கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாக தான் உள்ளது. எங்கு பார்த்தால் இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். எங்களுக்கு இது உற்சாகமாக இருக்கிறது.

நாகரீக வளர்ச்சி அரசியல்
அதேவேளையில் எங்களின் அரசியல் வளர்ச்சி சார்ந்த அரசியலாகும். நாகரீகமான வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது தான் எங்களின் அரசியல். பிரிவினை, பிரச்சனை, தூண்டுவிடுதல் உள்ளிட்ட யாரையும் கொச்சைப்படுத்தும் அரசியல் எங்களுடையது கிடையாது'' என்றார்.












Click it and Unblock the Notifications