வடமாநிலத்திற்கு நவீன ரயில்கள்.. தமிழகத்திற்கு ஓட்டை உடைசல் பெட்டியா? உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை: நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்தியன் ரயில்வே' முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஆனால் இவ்வளவு பழமை வாய்ந்த ரயில்வே துறையில் சமீப நாட்களாக நடக்கும் விபத்துக்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன.

குறிப்பாக ஒடிசா ரயில் விபத்து, இந்திய ரயில்வே துறை மீது கடுமையான விமர்சனங்களை கிளப்பியது. மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு, 12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இப்படியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ம் இயக்கப்பட்ட ரயில் ஒடிசாவில் பெரும் விபத்தில் சிக்கியது.
இந்த கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். அதேபோல 1,000க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்தியன் ரயில்வே வரலாற்றில் இது மிகமோசனமான ரயில் விபத்தாக பார்க்கப்பட்டது. இதற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. ஆனால், சம்பவ இடத்தை பார்வையிட்ட மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இனி இதுபோன்று நடக்காது என்று உறுதியளித்தார்.
இவர் உறுதியளித்து 6 மாதத்திற்குள் மற்றொரு கோர விபத்து ஆந்திராவில் நடந்தது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா பகுதியில், பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் மோதியது. இதில் 13 பேர் வரை உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், அரசு தரப்பில் 8 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டது.
இது தவிர ஆங்காங்கே சிறு சிறு விபத்துகள் நடந்தன. தமிழ்நாட்டில், கடந்த டிசம்பர் மாதம் பரனுர் ரயில் நிலையத்திற்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் செங்கல்பட்டு-சென்னைக்கு இடையே ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து வந்த ரயில்கள் அனைத்தும் செங்கல்பட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை சரி செய்ய 24 மணி நேரத்திற்கும் மேல் ஆனது.
மற்றபடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் ரயில்கள் அவ்வப்போது தடம் புரண்டு விபத்தில் சிக்குகின்றன. பணிமனைக்கு செல்லும் ரயில் என்பதால், அதில் பயணிகள் இருக்கவில்லை. எனவே உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், ரயில் சேவைகள் சில மணி நேரம் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியாக அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் தமிழகத்தில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நடைமுறையை மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் ஆன்லைன் முறையில் பரிசோதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தஞ்சாவூரை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு,
“கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும் ரயில்களை பராமரிப்பதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டுகிறது. முகம் சுளிக்கும் நிலையில் ரயில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் இயங்கும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன. வடமாநிலங்களில் தான் புதிய நவீன ரயில்பெட்டிகள் ரயில்களில் பொருத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இயங்கும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன, இந்த நிலை மாற வேண்டும்” என கருத்து தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே ரயில்வே துறை மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நீதிபதிகளின் இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications