"அது சேது சமுத்திர திட்டம் இல்லை.. திராவிடன் கால்வாய் திட்டம்.. அதுவே சரியாக இருக்கும்.." கி வீரமணி
சேது சமுத்திர திட்டத்தை திராவிடன் கால்வாய் திட்டம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று கி வீரமணி தெரிவித்துள்ளார்.
மதுரை: சேது சமுத்திர திட்டம் குறித்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அதைத் திராவிடன் கால்வாய் திட்டம் என்றே அழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து திமுக மீண்டும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. சமீப காலங்களில் இது தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதனிடையே சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதன் அவசியம் குறித்து விளக்கும் மாநாடு மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. திராவிடர் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

டிஆர் பாலு
தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர், திமுக எம்பி டிஆர் பாலு, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பேசிய டிஆர் பாலு, "சேது சமுத்திர திட்டத்திற்கு மக்களிடையே விழிப்புணர்வு உள்ளது. தேசத்தின் வளர்ச்சி பல வல்லுநர்கள் கொண்டு வந்த திட்டம் தான் சேது சமுத்திர திட்டம். வெறும் 23.5 கிமீ தூரத்திற்கு மட்டுமே இதன் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்த நிலையில், ஆன்மீகத்தைக் காரணம் காட்டி இத்திட்டத்தைக் கைவிட்டார்கள். சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தும் வழித்தடத்தில் பாலம் அல்லது புராதன கட்டமைப்பு எதுவும் இல்லை என்று ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

ஏமாற்ற முடியாது
ஆன்மீகத்தை இதற்குக் காரணமாகச் சொன்னவர்கள் புண்ணிய நதிகளாகக் கருதப்படும் காவிரி கங்கையில் பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடந்து போது.. அதை மட்டும் ஏன் தடுக்கவில்லை. இதில் இருந்தே அவர்கள் அரசியல் உள்நோக்கம் காரணமாகவே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது நமக்குத் தெரிகிறது. இத்திட்டம் மட்டும் கொண்டு வரப்பட்டால் தென்மாநிலங்கள் அனைத்துமே வளர்ச்சி பெறும். மக்கள் இப்போது பகுத்தறிவுடன் உள்ளனர். அவர்களை யாராலும் ஏமாற்றவே முடியாது" என்றார்.

விசிக திருமாவளவன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய விசிக திருமாவளவன், "சேது சமுத்திர திட்டம் அறிவியல் உண்மை பேசுவோருக்கும் புராணம் சார்ந்த பொய் புனைவு பேசுவோருக்கும் இடையே உள்ள பிரச்சினையாக உள்ளது. எந்தவொரு ஆவணமும் இல்லாமல் இத்திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க மத நம்பிக்கை என்ற ஒரே பிரிவு தான் காரணமாக இருந்தது. பாஜக ஆட்சியில் இருக்கும் வரை இத்திட்டத்தை நம்மால் எளிதாக நிறைவேற்ற முடியாது. பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் எந்த தடையும் இல்லாமல் இது நிறைவேறும்" என்றார்.

சேது சமுத்திர திட்டம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய திராவிட கழகத் தலைவர் வீரமணி, "இதில் நாம் நிச்சயம் வெல்வோம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்த தீர்மானத்தை இப்போது நிறைவேற்றியுள்ளது.. முன்பு இத்திட்டத்திற்கு எதிராக இருந்த அதிமுக இப்போது இதை ஆதரித்துள்ளனர். பாஜகவும் கூட நாங்கள் இத்திடத்திற்கு எதிரி இல்லை என்று கூற தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நாம் வெற்றியை நெருங்குகிறோம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

திராவிடன் கால்வாய் திட்டம்
இந்தத் திட்டத்தைச் சேது கால்வாய் திட்டம் என்று அழைப்பதை விடத் திராவிடன் கால்வாய் திட்டம் அல்லது தமிழன் கால்வாய் திட்டம் என்று அழைப்பது சரியாக இருக்கும். இத்திட்டம் மட்டும் நிறைவடைந்தால் தென் மாநிலங்கள் அனைத்துமே செழிக்கும். இளைஞர்களின் எதிர்காலம் மேம்படும். இது குறித்து மக்களிடையே விளக்கிச் சொல்லும் வகையில் இயக்கத்தை நடத்த உள்ளோம். வரும் பிப். 3ஆம் தேதி ஈரோட்டில் இருந்து தொடங்கும் இந்த இயக்கம் அடுத்த 9 மாதங்களுக்குச் சேது சமுத்திர திட்டம் குறித்து பிரசாரம் செய்யும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications