மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்.. பக்தி பரவசத்துடன் எதிர்சேவை.. அதிர்ந்த கோவிந்தா முழக்கம்!
மதுரை: இன்று காலையில் மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், தேரோட்டம் நேற்றும் நடைபெற்றது.

இதற்கிடையே, அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. நேற்று மாலையில் அழகர் மதுரை புறப்பாடு நடந்தது. இதைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். கோவிலில் 18ஆம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. அப்போது கள்ளழகரின் பல்லக்கு உத்தரவு பெற்று நகர்ந்தது. உடனே அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர்.
பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலையில் மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர்.
கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை அளித்தனர். அழகர், கருப்பணசாமி, அனுமன் வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், தீப்பந்தம் ஏந்தியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு வழிபாடுகளுக்கு பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைகிறார்.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.
அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை 494 மண்டகப்படி களில் இந்தாண்டு கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை மறுநாள் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார திருக்கோலங்களில் காட்சி தருகிறார்.
3 ஆம் தேதி இரவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெறும். 4 ஆம் தேதி மதுரையில் இருந்து அழகர்மலை நோக்கி புறப்படுகிறார். 5 ஆம் தேதி காலையில் இருப்பிடம் செல்கிறார். 6 ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நாளை அதிகாலை கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு மதுரை மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications