தேர்தல் கிட்டக்க வந்துருச்சு.. மு.க.அழகிரியை எங்கப்பா காணோம்!
மதுரை : தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. பங்குனி மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி, கமல், ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.
மனுதாக்கல் முடிந்த கையோடு திருவாரூரில் இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்க போவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் ஸ்டாலினையும் அவரது ஆதரவாளர்களையும் ஜெயிக்க விட மாட்டேன் என சவால் விட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இதுவரை வாய் திறக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்.
இவரைப் பற்றி நிறைய பில்டப்செய்தனர். அதைப் பண்ணப் போகிறார். ரஜினியுடன் சேரப் போகிறார். பாஜகவில் இணையப் போகிறார். ஸ்டாலின் கதி கலங்கிப் போய் இருக்கிறார் என்று கூட கூறினார்கள். ஆனால் ஒன்றையும் காணோம்.

ஓபனாக சவால் விட்ட அழகிரி
திமுக.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அமைதி காத்து வந்த அழகிரி, அவ்வப்போது வெளியில் வரும் போது செய்தியாளர்களின் கேள்விகளையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஜனவரி மாதம் மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்த அழகிரி, ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது. தனது ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது. தேர்தல் வரட்டும் களத்தில் இறங்குவோம். மதுரையில் மட்டுமல்ல தென் மாவட்டங்களில் தனது ஆதரவாளர்கள் திமுக.,வை வர விடமாட்டார்கள் என பேசினார்.

அழகிரியால் பரபரத்த அரசியல்
அழகிரியின் இந்த ஆவேச பேச்சால் தமிழக அரசியலை பரபரப்பாகி, அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என கவனிக்க துவங்கியது. அழகிரி தனிக்கட்சி துவங்க போகிறார்கள் எனவும், பாஜக.,வில் இணைய போகிறார் எனவும், ரஜினி ஆரம்பிக்க போகும் கட்சியில் இணைய போகிறார்கள் எனவும் பல விதமாக தகவல் பரவியது. அழகிரியின் பேச்சு திமுக.,விற்கு எதிராக இருந்ததால் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள், தேர்தலில் நமது வேலை சுலபமாகி விட்டது என குஷியாகின.

மீண்டும் மவுனமான அழகிரி
ஆனால் மதுரை கூட்டத்திற்கு பிறகு அழகிரி எங்கே இருக்கிறார் என கேட்கும் அளவிற்கு மவுனமாக இருந்து வருகிறார். தேர்தல் வரட்டும் என சொன்னவர், தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கலும் துவங்கி விட்ட பிறகும் மவுனமாக இருந்து வருகிறார். தனது நிலைப்பாடு என்ன என்றோ, யாருக்கு தனது ஆதரவு என்றோ அவர் இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை.

அழகிரி மவுனத்தின் பின்னணி காரணம்
அழகிரியின் நிலைப்பாடு குறித்து அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டால், விரைவில் அவர் களத்தில் இறங்குவார் என்கின்றனர். ஆனால் அழகிரி குடும்பத்திற்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, தேர்தல் முடியும் வரை அமைதியாக இருக்கும்படி குடும்பத்தினரும், நண்பர்களும் அழகிரியிடம் கூறி உள்ளனராம். நமது தனிப்பட்ட பிரச்னையை இப்போது கிளப்பினால் அது தேர்தலில் திமுக.,விற்கு எதிராகவும், எதிரிகளுக்கு சாதகமாகவும் அமைந்து விடும் என அவர்கள் கூறியதால் அழகிரி மவுனமாக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications