முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை.. மதுரையில் அமைச்சர்கள் சூழ மாலை அணிவித்தார்
மதுரை: மதுரை சென்று உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்துக்கு ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் நேற்று இரவு மதுரை சென்றடைந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் மதுரைக்கு வர இருப்பதை அடுத்து மதுரையில் ட்ரோன் கேமராக்களை இயக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறார். இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனா்.
இதனை அடுத்து, மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் ட்ரோன் கேமராக்களை இயக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவை கண்காணிக்க காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது." என்றாா். நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், அரசு விருந்தினா் மாளிகையில் தங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து சிலைக்கு கிழே வைக்கப்பட்டு இருந்த முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கும் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிசாமி தியாகராஜன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர், திமுக நிர்வாகிகளும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications