'சிலுவை வைத்திருக்கும் அனைவரும் மதம் மாறியவர்களா?'சாதி சான்றிதழ் வழக்கில்..ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
மதுரை: ஒருவரது வீட்டில் சிலுவை இருக்கிறது அல்லது அவர் தேவாலயத்திற்குச் செல்கிறார் என்பதற்காகவே அவர் தான் பிறந்த மத நம்பிக்கையை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார் என்று அர்த்தமாகாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதை அடிப்படையாக வைத்து ஒருவரது சாதி சான்றிதழை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பி முனீஸ்வரி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அதில் தனது சாதி சான்றிதழை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் 2013ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த அவருக்கு அதற்கான சான்றிதழையும் வைத்திருந்தார். பின்னர் அவர் ஒரு கிறிஸ்தவரை மணந்தார். மேலும், தனது குடும்பத்திலுள்ள குழந்தைகளையும் அவர் கிறிஸ்தவர்களாகவே வளர்த்துள்ளார். இதை ஒரு காரணமாக கூறி, அவரது சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. அவர் இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

க்ராஸ்
முனீஸ்வரியின் கிளினிக்கிற்குச் சென்ற போது, அங்குச் சுவரில் 'க்ராஸ்' (christian cross) இருப்பதைக் கண்டதாகவும் இதன் அடிப்படையில், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்பதை யூகித்து, அவரது தாழ்த்தப்பட்டோர் சான்றிதழை ரத்து செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி அதிருப்தியடைந்தார். அதிகாரிகளைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள், "அவர் இந்து மத நம்பிக்கையைக் கைவிட்டதாகவோ கிறிஸ்தவத்தைத் தழுவிவிட்டதாகவோ தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை. குடும்பத்தின் ஒரு பகுதியாக, அவர் கணவன் மற்றும் குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சைகளுக்குச் சென்றிருக்கலாம்.

குறுகிய மனப்பான்மை
ஆனால் தேவாலயத்துக்குச் செல்கிறார் என்றே ஒரே காரணத்திற்காக, அவர் பிறப்பின் முதல் பின்பற்றி வரும் மத நம்பிக்கையைக் கைவிட்டு விட்டார் எனக் கூற முடியாது. அதிகாரிகளின் இந்த செயல்கள் அவர்களின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது. நமது அரசியலமைப்பு இதை ஒருபோதும் ஊக்குவிக்காது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் வெளிப்படையாகவும் பரந்த மனதுடன் விசாரணையை நடத்த வேண்டும்.

முக்கிய உத்தரவு
அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை தன்னிச்சையானது என்றும் எந்த விதமான முறையான ஆதாரங்கள் இல்லாமல் வெறும் அனுமானங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் முனீஸ்வரிக்கு உடனடியாக சாதி சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஏகப்பட்ட சாக்குகள் கூறப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications