10.63 சென்ட் நிலம்.. மதுரை சர்வேயர், விருதுநகர் விஏஓ! பட்டா மாறுதல் கேட்டால் அரசு ஊழியர்கள் ஒரே போடு
மதுரை: மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைய தினம் ஒரே நாளில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அம்மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.. சமீபகாலமாகவே அரசு ஊழியர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை கைதாகிவரும் நிலையில், வருவாய்த்துறை, பதிவுத்துறை தரப்பில் இந்த கைது நடவடிக்கைகள், அதிர்வலைகளை உண்டாக்கி வருகின்றன. கைதான நபர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தாறுமாறாக பெருகி வருகிறது.. இதில், மின்சார துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் லஞ்சம் நிலவுகிறது என்றாலும், வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச லாவண்யங்கள் சற்று அதிகமாகவே நடக்கிறது. இதற்கு காரணம், இங்குதான் அதிக அளவு பணம் புழங்குகிறது..

நிலம் அளவீடு - சர்வேயர்
நிலம் அளவீடு செய்ய வேண்டுமென்றும், சாதி சான்றிதழ் கோரியும், பட்டா மாறுதல் கோரியும், உதவித்தொகை என பல்வேறு விண்ணப்பங்களுடன் அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல நேரிடும்போது, அவர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகாரை தந்துவிடுகிறார்கள்.
அப்படித்தான் நேற்றைய தினமும் நடந்துள்ளது.. மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ளது வலையங்குளம்.. இங்கு வசித்து வந்த சுரேஷ் தன்னுடைய மனைவி லாவண்யா தேவி பெயரில் 10.63 சென்ட் இடத்தை வாங்கியிருக்கிறார்.. இதற்கான பட்டா மாறுதலுக்காக வலையங்குளம் சர்வேயர் ராமராஜ் (எ) அன்புராஜிடம் (35) லாவண்யா தேவி மனு அளித்தார்..
பட்டா மாறுதல்
ஆனால், பட்டா மாறுதல் செய்ய ராமராஜ் சுரேஷிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கவும், நேற்று காலை சுரேஷ் ரசாயனம் கலந்த ரூ.5 ஆயிரம் பணத்தை சர்வேயர் ராமராஜிடம் தந்துள்ளார்.. அப்போது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள், சர்வேயர் ராமராஜை கைது செய்தனர்.

அதேபோல, விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி மல்லாங்கிணர் சூரம்பட்டியைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் சூர்யகுமார் 25. இவரது அப்பாவின் பெயரிலுள்ள வீட்டு மனையை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய மல்லாங்கிணறு விஏஓ கரைமேலுவை அணுகினார். அதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம். இதையடுத்து, இந்த விஏஓ கரைமேலு கைதானார்..
சொத்து வரி கட்ட விண்ணப்பம்
அதேபோல, தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வடுகப்பட்டி அருகிலுள்ள தெற்கு சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் புளியங்குடி நகராட்சி பகுதியில் காலி மனை விலைக்கு வாங்கி அதில் 800 சதுரஅடி அளவில் புதிதாக வீடு கட்டி உள்ளார். புதிய வீட்டிற்கு சொத்து வரி கட்டுவதற்காக புளியங்குடி நகராட்சிக்கு சென்று விண்ணப்பித்துள்ளார்.
அப்போது புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர், சொத்துவரி நிர்ணயம் செய்ய ரூபாய் 20 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால், தானே வரி செலுத்தி ரசீதை வாங்கி தந்துவிடுகிறேன் என்றாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ் இதுகுறித்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அளிக்கவும், அகமது உமா கைதானார்.. இப்போது கைதான அனைத்து நபர்களிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications