திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம்! நீதிபதி சுவாமிநாதன் அனுமதி செல்லுமா? நாளை தீர்ப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் உத்தரவு தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அது போல் தர்காவில் சந்தனக் கூடு விழா குறித்தும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் விசாரித்த இவ்வழக்கில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், "ராம. ரவிக்குமார், தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. அது தீபத் தூண் இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 1920ஆம் ஆய்வு அறிக்கையிலும் தூண் பற்றிய குறிப்பு இல்லை," என்று வாதிட்டார்.
அவர் வாதிடுகையில், "கோயிலின் வழக்கமான நிகழ்வுகளை விதிமுறைகளின்படி நடத்த நிர்வாகத்திற்கே முழு உரிமை உண்டு. பூஜைகள் முறையாகப் பின்பற்றப்படுவதால், தனி நீதிபதி உத்தரவை ஏற்க இயலாது. இவ்வழக்கு உரிமையியல் நீதிமன்றத்திலேயே நடந்திருக்க வேண்டும். 'கோயில் அல்லது அரசு சொத்தில் தனிநபர் உரிமை கோர முடியுமா?' என்ற உச்ச நீதிமன்ற கேள்வி இங்கு எழுகிறது," என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை தீப வழக்கில், நாளைய தினம் உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பை வெளியிடவுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை ராமரவிக்குமார், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அது போல் பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் உள்ளிட்டோரும் மனு செய்திருந்தனர். இவற்றை டிசம்பர் 1 ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கமான இடங்களைத் தவிர தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும் கோயில் நிர்வாகம் சார்பிலும் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி ஜெயசந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.
இந்த நிலையில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது. இதனிடையே மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கில் சந்தனக் கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். இதில் 50 பேர் மட்டுமே பங்கு பெற வேண்டும்.
விலங்குகளை பலியிடக் கூடாது. விலங்கு இறைச்சியை எடுத்துச் செல்லக் கூடாது. அசைவ உணவு சமைக்கக் கூடாது. எந்த ஒரு அசைவ உணவையும் எடுத்துச் செல்லக் கூடாது. இந்த உத்தரவை மலையின் அடிவாரம் முதல் உச்சி வரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் 50 பேர் மட்டுமே பங்கு பெற வேண்டும் என்ற உத்தரவை நீக்க தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தர்கா நிர்வாகம் முறையிட்டது. இதை இன்று விசாரணைக்கு ஏற்க மறுக்க நீதமன்றம் இந்த விவகாரம் குறித்து தீபத்தூண் வழக்கில் விவாதிக்கப்படும் என்றும் தர்கா நிர்வாகம் மனு நாளை விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications