மதுரை ஆட்சியர் மீது பரபர குற்றச்சாட்டை வைத்த திருமாவளவன்.. விசிகவிற்கு எதிராக செயல்படுவதாக அட்டாக்
சென்னை: மதுரை ஆட்சியர் சங்கீதா, தனிப்பட்ட முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார். மதுரை அருகே கட்சியின் கொடி அகற்றபட்டது தொடர்பாக பேசிய திருமாவளவன் இவ்வாறு சாடியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் பாமக மற்றும் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கலாம் என்று அறிவித்தார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, மது ஒழிப்பு மாநாடு நடத்துவதோடு, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, திருமாவளவனின் எக்ஸ் தளத்தில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பேசிய வீடியோ வெளியானது. திருமாவளவன் பேசிய அந்த வீடியோவில், "தமிழ்நாட்டில் யாரும் எதிர்த்து பேசக்கூடாது. உயர்ந்த பதவிக்கு ஆசை படக்கூடாது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது என்ற நிலை இருந்தது. ஆனால் 2016-ல் முதல் முதலில் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்தியது விடுதலை சிறுத்தைகள்தான்.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்றோம். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம் என்றோம். இதையெல்லாம் பேசும் துணிச்சல் மிக்க கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்" என்று பேசியிருந்தார். ஆனால் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. இது குறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, "அட்மினிடம் தான் கேக்க வேண்டும் எனவும் நான் ஏற்கனவே பலமுறை பேசியதுதான்" என்றும் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த பரபரப்புக்கு இடையே நேற்று இரவு மதுரையில் விசிக கட்சியின் கொடி அகற்றப்பட்டது. மதுரை மாநகர் புதூர் பேருந்து நிலையம் அருகே விசிக சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கட்சி கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று இரவு 62 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டது.
ஆனால் அனுமதியின்றி கொடி நடப்படுவதாக கூறி போலீசார் அகற்றினர். அப்போது போலீசாருக்கு விசிகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விசிக தொடங்கியபோது முதன்முதலில் ஏற்றப்பட்ட கொடி கம்பம் உள்ள நிலையில், புதிதாக அனுமதியின்றி வைக்கப்பட்டதால் இந்த கொடி கம்பம் வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில்தான், மதுரை மாவட்ட ஆட்சியரை விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர் சித்து இருக்கிறார். திருமாவளவன் கூறியதாவது:- மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா பொறுப்பேற்ற் நாளில் இருந்து விசிக எங்கே கொடியேற்றினாலும் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார். அடிக்கடி ஏதேனும் பிரச்சினை செய்து கொண்டே இருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் ஆணை பெற்ற பிறகும் திருமங்கலம் அருகே மேலப்பட்டி என்ற இடத்தில் விசிக கொடியேற்ற அனுமதி கேட்டும் தர மறுக்கிறார்.
அதேபோல ஆலத்தூர் என்ற இடத்தில் விசிக கொடியேற்ற நீதிமன்றம் சொல்லியும் தர மறுக்கிறார். தற்போது புதூர் பக்கத்தில் ஏற்கனவே ஏற்றப்பட்ட கொடி, சாலையை அகலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அகற்றப்பட்டு இருக்கிறது. அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விட்டுவிட்டார்கள். அவர்கள்தான் தற்போது 20 அடி உள்ளே தள்ளி கொடியை நட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு கொடி இருக்கிறது. இரண்டாவது கொடி எதற்கு என்கிறார்கள்.
முதலில் என்ன சொன்னார்கள் என்றால் 50 அடி 60 அடி இருக்கிறது அதனால் முடியாது என்றார்கள். இப்போது அனுமதி இல்லாமல் ஏற்றுகிறார்கள் என்கிறார்கள். அடுத்து மதுரை மாநகராட்சி என்ஓசி கொடுத்தால்தான் ஏற்ற முடியும் என்கிறார்கள். இது தனிப்பட்ட முறையில் மதுரை ஆட்சியர் விசிகவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவது தெரிகிறது. இதை அரசின் கவனத்திற்கும் முக்கியமான மூத்த அமைச்சர்கள் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications