மதுரை உசிலம்பட்டியில் பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்ததாக பரவும் தகவல் பொய்- காவல் துறை
மதுரை: மதுரை சங்கம்பட்டியில் பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழிக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என மதுரை மாவட்ட காவல் துறை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 17ஆம் தேதி அன்று உசிலம்பட்டி, சங்கம்பட்டி (செல்லம்பட்டி), பார்வதி அம்மன் கோயில் தெரு (காலணி) சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் கடந்த புரட்டாசி மாதம் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 16ஆம் தேதி அன்று தங்கள் ஊரைச் சேர்ந்த சில நபர்கள் ஆபாசமாக பேசி, ஜாதி பெயரைச் சொல்லித் திட்டி, பின்னர் அங்கிருந்து 6 வயது சிறுவன் உள்பட எல்லோர் கால்களிலும் விழ வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மேற்படி புகார்தாரரின் மனுவைப் பெற்று கடந்த 18ஆம் தேதி அன்று உசிலம்பட்டி நகர் காவல் நிலைய குற்ற எண் 26/2025 U/S, 296 (6), BNS r/w 3(1) (r) 3(1)(s) SC/ST POA Act-ன் கீழ் சம்பந்தப்பட்ட 6 எதிரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் சிறுவன் மீது சிறுநீர் கழித்து அராஜகம் என்ற தலைப்பில் தவறான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. மேற்படி செய்தியானது உண்மைக்கு புறம்பானது. மேற்படி சம்பவம் தொடர்பாக சம்பவத்திற்கான காரணம் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் காவல் துறையினரால் உடனடி மற்றும் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பு புகார்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புரட்டாசி மாதம் நடந்த திருவிழாவின் போது பட்டியலின சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து மீண்டும் பொங்கல் பண்டிகையின் போது 17 வயதாகும் அந்த சிறுவனை மற்ற சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் கடத்தி சென்றனராம். அப்போது ஊர் கண்மாய் அருகே வைத்து சிறுவனின் செல்போனை பறித்துக் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த சிறுவனை அனைவர் காலிலும் விழ வைத்ததுடன் 6 வயது சிறுவனின் காலிலும் விழ வைத்தனராம். மேலும் 17 வயது சிறுவன் மீது சிறுநீர் கழித்த அவலமும் நடந்து அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாம்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அதே கிராமத்தை சேர்ந்த உக்கிரபாண்டியன், கிஷோர், மணிமுத்து, பிரேமா, சந்தோஷ் மற்றும் நித்தீஷ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications