பழைய ஓய்வூதிய திட்டம்.. அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்! விடிவு காலம் எப்போது?
மதுரை: அரசு ஊழியர்களின் வாக்குகளை கவர, கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் முக்கியமானது பழைய ஓய்வூதிய திட்டம். ஆனால் 5 ஆண்டுக்கால ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் என்பது, அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை. பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொழிலாளர்கள் எந்த பங்களிப்பையும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு குறிப்பிட்ட அளவுக்கு பங்களிப்பை செலுத்த வேண்டும். மட்டுமல்லாது ஓய்வூதியமும் குறைவாகவே கிடைக்கும்.

உதாரணத்திற்கு ஒரு அரசு ஊழியர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுகிறார் எனில் அவருடைய மாத சம்பளம் ரூ.41,667. அவர் ஓய்வு பெறும் வரை, ஓய்வூதியத்திற்கு எந்த பங்களிப்பையும் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும் அரசு அவருக்காக ரூ.22,500 தொகையை ஓய்வூதியமாக வழங்கும். பணவீக்கத்தை பொறுத்து ஓய்வு ஊதியம் உயரும். ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.30000 வரை ஓய்வூதியம் கிடைக்கலாம். ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. மட்டுமல்லாது பணவீக்கத்தை பொறுத்து இந்த தொகை உயராது.
எனவேதான் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த பிரடெரிக் எங்கெல்ஸ், அரசு வாக்குறுதி கொடுத்ததை போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், "பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய பொதுநல மனு குறித்து, அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை மனுதாரரிடம் ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
ஏற்கெனவே இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த உத்தரவு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications