குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.. அதிரடி
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கம் விடுதி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கில் இன்னும் கைது நடவடிக்கை எடுக்காத நிலையில் சங்கம் விடுதி நீர்த்தேக்க தொட்டி பிரச்சனை பெரும் பிரச்சனையாக கிளம்பியது.
இந்நிலையில் தான் புதுக்கோட்டை கரம்பக்குடியை சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அதில், ‛‛சங்கம்விடுதி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நீரை அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த வழக்கு முறையாக விசாரிப்படுவதாக தெரியவில்லை.
இன்னும் இரட்டை குவளை முறை உள்ளது. திருமண மண்டபங்கள் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இதனால் புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றுவதோடு, அந்த கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு
வந்தது. அப்போது அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "மனுதாரர் குறிப்பிடும் சங்கன்விடுதி கிராமத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். ஏப்ரல் 25 ம் தேதி காலை 10.30மணி அளவில் அங்கு வசிக்கம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளையராஜா என்பவர் குடிநீர் தொட்டியினுள் கிடப்பது பாசியா? சாணமா? என தொட்டியை சுத்தம் செய்தவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நீரின் மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில், நீரில் கலந்திருந்தது பாசி என்றும் அந்த நீர் குடிப்பதற்கு உகந்தது என்றும் தெரியவந்தது. பின்னர் அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. அங்கு தீண்டாமை எதுவும் இல்லை" என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முறையாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆகவே இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. வழக்கின் ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications