கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.. மதுரையையே குலுங்க செய்த நாராயணா முழக்கம்
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 6 மணியளவில் வைகை ஆற்றில், கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. இந்நிகழ்வையொட்டி வைகையாறு முழுவதும் வெள்ளம்போல பக்தர்களின் தலைகள் காட்சியளித்தது. கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் பக்தர்கள் நடனமாடினார்கள். இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.. இதையடுத்து, தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

கள்ளழகர் கோவிலில் கடந்த 9ம் தேதி மாலையில், மேளதாளம் முழங்க பரிவாரங்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளினார். அங்கு நூபுர கங்கை தீர்த்தத்தால் அழகருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், இன்று நடைபெற உள்ளது.
எதிர்சேவை வைபவம்
இதற்காக, மே 10 ல் அழர்கோயிலில் புறப்பட்டு மதுரை வந்த கள்ளழகருக்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது.. இதையடுத்து, புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.
நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. பிறகு, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும், பிறகு ஆயிரம் பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார்.
இன்று அதிகாலை கருப்பணசுவாமி கோயில் முன்பு, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மீண்டும் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். வழிநெடுகிலும், கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் பக்தர்கள் உணர்ச்சிபூர்வமாக வழிபட்டனர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்
இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில், பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார். வெள்ளிக்குதிரை வாகனத்தில், அவரை வீரராகவ பெருமாள் வரவேற்றார்.
அதாவது, காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்குவந்திருந்து கள்ளழகரை வரவேற்றார் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர். வைகை ஆற்றுக்குள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகரை வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு அழைத்தார். பக்தர்கள் பூக்கள் தூவி கள்ளழகரை வரவேற்றனர்.
கருட வாகனத்தில் புறப்பாடு
இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நாளை 13ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பின்னர் கருட வாகனத்தில் தேனூார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சியும் பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார்.












Click it and Unblock the Notifications