சரஸ்வதி நாகரிகம் vs கீழடி.. 5 மாதத்தில் கண்டறிந்து உலகிற்கே பாஜக கொடுத்த அதிர்ச்சி.. சு.வெங்கடேசன்
மதுரை: ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல் சரஸ்வதி நதியையே கண்டறிந்து பாஜக அரசு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். ராஜஸ்தானின் பஹஜ் கிராமத்தில் 5 மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடத்தி 10 குழிகள் தோண்டப்பட்டுள்ளதாக கூறிய சு.வெங்கடேசன், கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கீழடி அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும், ஒரேயொரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறி இருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

கீழடி விவகாரம்
பல ஆண்டுகளாக ஆய்வு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்த மத்திய அரசு, திடீரென திருப்பி அனுப்பிவிட்டு அறிவியல் ஆதாரங்கள் கேட்பது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை கண்டித்து திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.
2 ஆண்களின் முக அமைப்புகள்
இதனைத் தொடர்ந்து கீழடி அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த இரண்டு ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். கணினி உதவியுடன் கூடிய 3டி முறையில், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் இந்தப் பணிகளைச் செய்தது.
3டி மாடலில் கீழடி மனிதர்கள்
அதுமட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் முகங்கள் மறுஉருவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் கீழடி விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. அதேபோல் மத்திய அரசு கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்காததும் விமர்சனத்தை பெற்று வந்தது.
சரஸ்வதி நதி அகழ்வாராய்ச்சி
இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பஹஜ் கிராமத்தில், கடந்த ஜனவரி முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் 75 அடி ஆழத்தில் சரஸ்வதி நதிப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில், 800க்கும் அதிகமான பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது வடமாநிலங்களில் அதிகமாக பேசுபொருளாகி இருக்கிறது.
சு.வெங்கடேசன் ஆவேசம்
இதே பாணியில் ஹரியாணா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனை மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக சாடி இருக்கிறார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர்.
5 மாதங்களில் பாஜக சம்பவம்
அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர். இதே முறையில் ஹரியானாவிலும் இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள். கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
கீழடிக்கு பின் அரசியல்
ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு என்று பதிவிட்டுள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக தொடக்கம் முதலே பேசி வரும் சு.வெங்கடேசன், கீழடி தொடர்பாக வைகை கரை நாகரீகம் என்ற நூலையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications