சு.வெங்கடேசன் vs தமிழிசை.. இதுதான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா? பதிலடி கொடுத்த மதுரை எம்பி!
தமிழிசை சவுந்திரராஜனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையிலான ட்விட்டர் மோதல் தீவிரமாகியுள்ளது. டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல என்று சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதில் அளித்திருந்த நிலையில், தான் டுடோரியலை குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், இதுதான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா என்றும் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் சில நாட்களுக்கு முன் பேசுகையில், ஆளுநர்கள், ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும், எங்கள் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை.
ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி நாடாளுமன்றம் சென்று, மத்திய அமைச்சர்களாகி இருப்போம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி ஆளுநராக நியமித்து வருகிறது.

சு.வெங்கடேசன் விமர்சனம்
எங்களைப் போன்ற திறமை மிக்கவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக வைக்கிறேன். இதை நான் சொன்னாலும் இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும் என்று பேசி இருந்தார். இதற்கு மதுரை எம்பி வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே, பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

டுடோரியல்
இதற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்தார். அந்தில், ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல. அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான். டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள்.

இறுமாப்பு
தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல. தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம். அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே. நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். இறுமாப்பு வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.

சு.வெங்கடேசன் பதிலடி
இதற்கு சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், நீங்கள் மக்களை கேவலப்படுத்தியதால் அந்த கேள்வி வந்தது தமிழிசை அவர்களே. நான் டுடோரியலை கேவலமாக சொல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

ராஜ்பவன் பயிற்சி
மக்கள் பெயில் ஆக்கினாலும் பிரதமர் பாஸ் போட்டு நாங்கள் ராஜ் பவனில் உட்கார்ந்து விடுவோம் என்பதே இறுமாப்பு. அதுவே கேள்வி. கேள்வியை விட்டு விட்டு வேறு ஏதாவது பதில் பேசினால் கூட பரவாயில்லை. எந்த தரத்திற்கு இறங்கி பேசியுள்ளீர்கள்? இது தான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா தமிழிசை அவர்களே! என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications