8 ஆண்டுகளுக்கு பிறகு.. மதுரையில் புரவி எடுப்பு விழா.. மஞ்சமலை அய்யனார் கோவிலில் பக்தர்கள் சிலிர்ப்பு
மதுரை: மதுரை பாலமேடு அருகே வலையபட்டியில் உள்ளது பிரசித்தி பெற்ற மஞ்சமலை அய்யனார்சாமி கோவிலின் புரவி எடுப்பு விழா அதாவது குதிரை எடுப்பு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.. 8 வருடம் கழித்து இந்த விழா நடத்தப்படுவதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.. இந்த வைபவம்தான் இணையத்தில் வைரலாகி சிலிர்ப்பை தந்து வருகிறது.
புரவி எடுப்பு திருவிழா, கிராம மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு கலாச்சாரமாகவே கருதப்படுவதால், ஆண்டாண்டு காலமாகவே கொண்டாப்பட்டு வருகிறது.

மதுரை புரவி எடுப்பு
இதில், மதுரை மாவட்டத்தில் புரவி எடுப்பு திருவிழாக்கள் பல்வேறு சமயங்களில் கொண்டாடப்படுகின்றன. ஒருசில கோயில்களில் சித்திரை மாதத்திலும், ஒரு சில கோயில்களில் வைகாசி மாதத்திலும், சில கோயில்களில் ஆடி மாதத்திலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக மதுரை மாவட்டத்திலுள்ள மஞ்சமலை அய்யனார் ஈரடி கருப்புசாமி கோவில் விளங்குகிறது.. இது பாலமேடு அருகே வலையபட்டி ஜமீன்தார்கள் கிராமத்தில் அமைந்துள்ளது.
நேர்த்திக்கடன்
இந்த மஞ்சமலை அய்யனார் ஈரடி கருப்புசாமி கோவிலில் புரவி எடுக்கும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.. இந்த உற்சவ விழாவில் சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு போவார்கள்.. இதற்காகவே அரசம்பட்டி பகுதியில் குதிரைகள், காளைகள், சுவாமி சிலைகள், குழந்தை பொம்மை சிலைகள், பைரவர், இல்லம், ஆட்டோ என 1000-க்கும் மேற்பட்ட சிலைகள் செய்து வர்ணம் பூசப்படும்..
பிறகு, இந்த சிலைகள் அனைத்தும் திருவிழா தினத்தன்று, சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மஞ்சமலை சுவாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு காணிக்கையாக வழங்கப்படுவது வாடிக்கையாகும்.
உற்சாக திருவிழா
அந்தவகையில், நேற்றைய தினம், புரவி எடுப்பு உற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.. 8 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால், அரண்மனை ஜமீன்தார்கள், வலையபட்டி, அரசம்பட்டி, சல்லிக்கோடாங்கிபட்டி, புதூர், லக்கம்பட்டி கிராம பொதுமக்கள் என அனைவருமே சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளில் கடந்த சிலநாட்களாகவே தீவிரமாக இறங்கினார்கள்..
கடந்த 25ம் தேதி, பூந்தமலை கொண்ட அய்யனார் சுவாமிக்கு பூணூல் சாற்றுதல் விழா நடந்தது நேர்த்திக்கடனாக குதிரை, காளை, பசுக்கள், திருபாதம், திருமண தம்பதிகள், குழந்தைகள் கோழி உள்ளிட்ட பல்வேறு உருவ வர்ண சிலைகள் எடுத்து வந்தனர்., மேலும், மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசுவாமி மற்றும் கன்னிமார் உள்ளிட்ட உப தெய்வங்களின் சிலைகளுடன், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக வலையபட்டி மந்தை திடலுக்கு எடுத்து வந்து வைத்தனர்.
குதிரை சிலைகள்
நேற்றைய தினம் திருவிழாவில், அரசம்பட்டி மந்தை திடலில் இருந்து ஸ்ரீ மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களின் சிலைகள், குதிரை சிலைகள் உட்பட பல்வேறு வண்ணமயமான சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பிறகு சுவாமிக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.
திரண்டு வந்த பக்தர்கள், குதிரைகள், காளைகள் மற்றும் மற்றும் சுவாமி சிலைகள், குழந்தை பொம்மை சிலைகள், பைரவர், வீடு, ஆட்டோ, உள்ளிட்ட பல்வேறு வகையான சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர்.
வேண்டுதல் நிறைவேற்றம்
இந்த விசேஷ திருவிழாவில், சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி, திண்டுக்கல், தேனி, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் சென்னை போன்ற பகுதிகளிலிருந்து பக்தர்கள் நேர்த்திகடனாக குதிரைகள், காளைகள், பசுக்கள், திருபாதங்கள், திருமண தம்பந்திகள், குழந்தைகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு உருவ வர்ண சிலைகளை எடுத்து வந்து, தங்களது வேண்டுதல் நிறைவேற்றினர். இதுதான் இணையத்தில் வீடியோவாக வெளியாகி, பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications