பாண்டியர் கட்டிய கோவில்.. திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சமைக்கத் தடை கோரி வழக்கு! முக்கிய உத்தரவு
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் பாதுஷா மலை எனக் கூறி சிலர் தர்காவில் ஆடு, கோழி பலியிட கோரி வரும் நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கி விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது. இரு தரப்பிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகளும், அமைப்புகளும் இது தொடர்பாக போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் பாதுஷா மலை எனக் கூறி சிலர் தர்காவில் ஆடு, கோழி பலியிட கோரி வரும் நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோவிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோவிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இந்த கோவிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது.
அதோடு அப்பகுதியினுள் மாமிசங்களை சமைத்து, பரிமாறவும் அனுமதிக்க கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. அதோடு திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என குறிப்பிடப்பட்டிருந்ததும் வருத்தமளித்தது. இது மதரீதியாக பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் உள்ளது. ஆகவே திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியக்கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், திருப்பரங்குன்றம், சிக்கந்தர் மலை குறித்து நிலுவையில் உள்ள் வழக்கு என அணைத்தையும் ஒன்றாக இணைத்து பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும் அப்போது இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications