நயினார் பட்டியலில் மதுரை தெற்கு தொகுதி.. அடித்து ஆடும் பூமிநாதன்! பாஜகவுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
மதுரை: மதுரை தெற்கு தொகுதியை மனதில் வைத்து பாஜக காய் நகர்த்தி வரும் சூழலில், மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் பல்வேறு வியூகங்களை வகுத்து மீண்டும் வெல்ல முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது. அதேபோல் மதுரை தெற்கு தொகுதியில் அதிமுகவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தாலும், பாஜக போட்டியிட்டால் வெல்லுமா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.
டெல்லிக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டின் பாஜக போட்டியிட விரும்பும் 50 தொகுதிகளுக்கான பட்டியலை மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோரிடம் வழங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்தப் பட்டியலில் மதுரையில் 3 தொகுதியில் போட்டியிட பாஜக தீவிரமாக இருக்கிறது.

இதனால் நயினார் நாகேந்திரனின் பட்டியலில் மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் ஆகிய தொகுதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய தொகுதிகள் அதிமுக வென்றுள்ள தொகுதியாகும். மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சத்தில் இருப்பதால், பாஜக அந்த தொகுதியை கேட்டுப்பெறும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் மேலூர் தொகுதியை அதிமுக தன் வசம் வைத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் மதுரை தெற்கு தொகுதி பாஜக வசம் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பாஜக நிர்வாகி ராம ஸ்ரீனிவாசன் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
செளராஷ்டிரா மக்களின் ஆதரவு பாஜகவுக்கு திரும்பிவிட்ட நிலையில், அந்த தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை விடவும் அதிக வாக்குகளை பாஜக அறுவடை செய்திருந்தது. தொகுதி வாரியாக பார்க்கப்பட்ட வாக்குகளில், மதுரை தெற்கு தொகுதி பாஜக 2வது இடத்தை பிடித்தது.
திமுக மற்றும் பாஜகவுக்கு இடையில் வெறும் 15 ஆயிரம் வாக்குகளே வித்தியாசமாக இருந்தது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்திருப்பதால், மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வெற்றி உறுதி என்ற நிலையில் இருக்கிறார்கள். ஆனால் மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் பல்வேறு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.குறிப்பாக மதுரை தெற்கு தொகுதியில் பட்டா பிரச்சனை அதிகமாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு பட்டா பெற்று கொடுத்து தொகுதியில் நல்ல பெயர் எடுத்துள்ளார். அதேபோல் சமூக ரீதியிலான வாக்குகள் பூமிநாதனுக்கு சாதகமான ஒன்றாகும். ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இடம்பெறாத பட்சத்தில், பாஜக போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிய விஷயமாக இருக்காது.
ஏனென்றால் அதிமுகவின் இரட்டை இலைக்கு மதுரை தெற்கு தொகுதியில் மிகப்பெரிய வலிமை உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் 2ல் அதிமுக எளிதாக வென்ற தொகுதிகளில் இதுவும் ஒன்று. இதனால் பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிட்டால், அதிமுக நிர்வாகிகளே வாக்களிப்பார்களா என்ற கேள்வி உள்ளது. இதனால் மதுரை தெற்கு தொகுதி நிலவரம் கடைசி நேரத்தில் மாறக்கூடும் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications