தனிஷ்க் கொள்ளைக்கு பின்.. நகை பையை நிஷாந்த் யாரிடம் தந்தார் தெரியுமா? கமிஷ்னர் சொன்ன ஷாக் தகவல்!
மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான யூடியூபர் நிஷாந்த் கொள்ளையடித்த நகைகளை எப்படிப் பதுக்கினார் என்ற முக்கிய பின்னணி வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 12ம் தேதி அதிகாலை, தனிஷ்க் நகைக்கடையின் லிப்ட் அமைக்க வைக்கப்பட்டிருந்த திறந்தவெளி வழியாக உள்ளே புகுந்த நிஷாந்த், அங்கு வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துத் தான் கொண்டு வந்திருந்த பையில நிரப்பியுள்ளார். பின்னர் அந்தப் பையை தோளில் மாட்டிக்கொண்டு, காதலி மீனாட்சியின் இருசக்கர வாகனத்தில் வெளியேறியுள்ளார்.

சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் போலீசாரை குழப்புவதற்காக நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் எனப் பல பகுதிகளில் சுற்றி வந்த நிஷாந்த்.. எப்படியாவது தப்பிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் இந்த கொடூரமான கொள்ளை சம்பத்தில் என்ன நடந்தது என்று மதுரை மாநகர கமிஷ்னர் ராஜேந்திரன் விளக்கி உள்ளார். அதன்படி, அதிகாலை நேரத்தில் தனது தந்தை சுரேஷைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். என்னிடம் நான் கொள்ளையடுத்த நகை பை இருக்கிறது.. அதை வாங்கி வீட்டில் பத்திரமாக வையுங்கள்.. என நிஷாந்த் கூறியுள்ளார்.
தடயங்களை எரித்து அழித்த தந்தை
மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் இது தொடர்பாக கூறுகையில், மகன் கொடுத்த அந்தப் பையை வாங்கிய தந்தை சுரேஷ், ஆரம்பத்தில் அதைத் தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார். உள்ளே இருப்பது கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் என்பது தெரிந்தும், சுரேஷ் அது குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் மகனுக்குத் துணை போயுள்ளார்.
அதுமட்டுமின்றி, போலீசாரிடம் சிக்காமல் இருக்கத் திட்டமிட்ட தந்தையும் மகனும் சேர்ந்து, ஆட்டோவில் மாடக்குளம் கண்மாய் மற்றும் கோபாலிபுரம் மலையடிவாரப் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். அங்கே மண்ணுக்குள் குழி தோண்டி நகைகளைப் புதைத்து வைத்ததுடன், கொள்ளையின் போது நிஷாந்த் அணிந்திருந்த உடைகள், கையுறை மற்றும் தடயங்களை வயல்வெளியில் வைத்துத் தீயிட்டு எரித்துள்ளனர், என்று கமிஷ்னர் ராஜேந்திரன் கூறி உள்ளார்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி
தடயங்களை எரித்துவிட்டதால் இனி யாராலும் தங்களைக் கண்டுபிடிக்க முடியாது என தந்தையும் மகனும் நினைத்தனர். ஆனால், அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் துணிகள் எரிக்கப்படுவதைப் பார்த்துச் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
அந்தத் தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதிக்கு வந்து சென்ற ஆட்டோவின் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, ஆட்டோ டிரைவர் சுரேஷ் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், மகன் நிஷாந்த் கொள்ளையடித்த நகைப் பையைத் தன்னிடம் கொடுத்ததையும், அதை மறைத்து வைக்க உதவியதையும் சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொள்ளையடித்த பிறகு நிஷாந்த் தனது தந்தையிடம்தான் நகைகளைக் கொடுத்துள்ளார்.. தந்தைதான் அதை வாங்கி மறைத்து வைத்துள்ளார். கொள்ளை போன 11 கிலோ 384 கிராம் நகைகளும் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுவிட்டன என உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது நிஷாந்த், அவரது காதலியான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் தந்தை சுரேஷ் ஆகிய மூவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால், நகைப் பையை வாங்கி வைத்தது முதல் வேறு யாருக்கெல்லாம் இதில் பங்கு உள்ளது என்பது வரையிலான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Click it and Unblock the Notifications
