வணக்கம்டா மாப்ள இனிமே நம்ம தான்.. ஒட்டுமொத்த மதுரையோட கலரே மாறப் போகுது! மாஸாக வரும் டைடல் பார்க்!
மதுரை: சென்னை, கோவை, ஒசூர் உள்ளிட்டவை மட்டுமே தகவல் தொழில்நுட்ப நகரங்களாக தமிழகத்தில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், மதுரையில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், மதுரை டைடல் பார்க்கின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
இந்திய அளவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சென்னை சிறப்பான இடத்தை பெற்று இருக்கிறது. பெங்களூருக்கு அடுத்ததாக சென்னை தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்குகிறது. ஆனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்கள் சென்னை நோக்கியே செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டைடல் பார்க், மினி டைடல் பார்க், டைடல் பார்க் நியோ ஆகியவை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, ஓசூர் ஆகியவை தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றத்தில் உள்ளன.
ஆனால் தமிழகத்தின் மிக பழமையான, தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை பண்பாட்டு தலைநகராக இருந்தாலும் வேலை வாய்ப்பு கிடைப்பதில் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கி இருக்கிறது. பல தென் மாவட்டங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் டைடல் பார்க் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.
ஏற்கனவே தஞ்சை உள்ளிட்ட சில பகுதிகளில் டைடல் செயல்பட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர், மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 280 கோடி ரூபாய் மதிப்பில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படும் எனவும், 5500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திட்டம் அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாத நிலையில் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களின் முயற்சியால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் தொடங்கி இருக்கும் நிலையில் மதுரை டைடல் பார்க்கின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐந்து ஏக்கர் பரப்பளவில் இதற்காக நிலம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆறு லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 12 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. பார்க்கிங்காக தரைக்கு கீழே கட்டிடம், தரை தளம், 12 மாடிகள் இந்த கட்டிடத்தில் இருக்கும். டாட்டா கன்சல்டன்சி இன்ஜினியரிங் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்ட இருக்கிறது. 2026க்குள் கட்டுமானம் முடிக்கப்பட இருக்கிறது .இதன் ஆலோசகராக சிபிஎல் நிறுவனம் செயல்படுகிறது.

சென்னையில் உள்ள டைடல் பார்க் போலவே மதுரையிலும் இந்த டைடல் பார்க் சிறப்பான வசதிகளுடன் அமைய இருக்கிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஐடி துறையில் திறமை வாய்ந்த இளைஞர்கள் பலர் இருக்கும் நிலையில் இனி அவர்கள் ஐடி வேலையை தேடி சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வது குறையும். மேலும் ஏற்கனவே மாட்டுத்தாவணி பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது டைடல் பார்க் அமைய இருப்பதால் அங்கு வீட்டு மனைகளின் விலை தாறுமாறாக எகிறி வருகிறது.












Click it and Unblock the Notifications