அண்ணாந்து பார்க்க வைக்கப்போகும் மதுரை.. தூங்காநகரில் அமையும் பிரம்மாண்டம்.. இளைஞர்களுக்கு ஜாக்பாட்!
மதுரை: தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமும் தமிழ்நாடு மின்னணு கழகமும் இணைந்து தமிழ்நாடு டைடல் பார்க் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றன. ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் டைடல் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது. அந்த வகையில் சென்னை, கோவை நகரங்களுக்கு அடுத்தபடியாக மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் டைடல் பார்க் கட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதன் தொடக்க பணிகள் நிதானமாக நடைபெற்று வந்தது. சேலம் உருக்காலை, நெய்வேலி என்எல்சி போன்ற எந்த பெரும் தொழிற்சாலைகளும் இல்லாத மதுரைக்கு, டைடல் பார்க் அறிவிப்பு இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மதுரையை பொறுத்தவரை மாட்டுத்தாவணி அருகே 9.97 ஏக்கர் நிலத்தில் டைடல் பார்க் அமையவுள்ளது. ரூ.500 கோடியில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் இரு கட்டங்களாக அமையவுள்ளது. இதன் மூலமாக சுமார் 5,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் எப்போது கட்டுமான பணிகள் தொடங்கும் என்பதே இளைஞர்களின் கேள்வியாக இருந்தது.
ஏனென்றால் தென் மாவட்டங்களில் இருந்து ஐடி பணிகளுக்கான சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இந்த நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி, டெண்டர் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக டைடல் பார்க்-க்கு அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து மாட்டுத்தாவணி பகுதியில் உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கின. ஒவ்வொரு நாளும் டைடல் பார்க் பணிகள் விறுவிறுவென நடந்து வந்தது. அதன் அருகிலேயே வண்டியூர் சுந்தரம் பார்க் பணிகளும் நடக்க, இன்னொரு பக்கம் சிவகங்கை சாலை முதல் கோரிப்பாளையம் வரையிலான பாலம் கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன.
டைடல் பார்க் பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் திமுக ஆட்சி முடிவதற்கும் டைடல் பார்க் பணிகள் முடிக்கப்பட்டு உடனடியாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை டைடல் பார்க் கட்டிடம் 6 தளங்கள் கட்டப்படுவதோடு, 72 மீட்டர் உயரத்திற்கு கட்டப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னைக்கு வெளியில் கட்டப்படும் மிகவும் உயரமான கட்டடமாக மதுரை டைடல் பார்க் டைடல் உருவாக உள்ளது. தற்போது அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் பில்டிங் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதுரையே விரைவில் மாறும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications