சுட்டெரிக்கும் வெயில்.. மதுரை தவெக மாநாட்டு தொண்டர்களே உஷார்! இதை கண்டிப்பா செய்யுங்க
மதுரை: மதுரையில் இன்று தமிழக வெற்றிக் கழத்தின் 2வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி மதுரையில் சுமார் 97 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியிருக்கிறது. மதியம் 12-1 மணியளவில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் அதன் தாக்கம் மாலை 4 மணி வரை இருக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதிக வெயில் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என தனியார் வானிலை ஆய்வு மையம் COMK எச்சரித்துள்ளது.

காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தரையில் போடப்பட்டிருந்த விரிப்புகளை எடுத்து கூரை போல தொண்டர்கள் அமைத்துக்கொண்டனர். இருப்பினும் வெயிலின் தாக்கத்தால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மாநாட்டிற்கு வந்திருந்தவர்களில் குழந்தைகள், பெண்கள் என சுமார் 50 பேர் வெயில் காரணமாக மயக்கமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றும் மதுரையில் சுமார் 104 பாரன்ஹீட் வரை வெயில் பதிவாயிருந்தது. இந்நிலையில், இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தொடர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மாநாட்டு திடலில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குடிநீர் கிடைக்கவில்லை என்று தொண்டர்கள் புலம்புகின்றனர். அதேபோல, வெளியில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களும் அதிக விலையில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால், வெறுமென தண்ணீர் மட்டுமே குடிப்பது போதுமானதல்ல என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் உடலிலிருந்து தண்ணீர் வியர்வையாக வெளியேறும். இத்துடன் எலக்ட்ரோலைட்டுகள் எனப்படும் முக்கியமான கனிமச் சத்துக்களும் வெளியேறிவிடும். எனவே இதனை சமாளிக்க வெறும் தண்ணீர் மட்டும் போதாது. இந்த நேரத்தில்தான் உடலில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதனால் உடலின் வெப்பம் அதிகரித்து உள் உறுப்புகள் பாதிக்கப்படும்.
இந்த நேரத்தில் சருமம் சூடாகவும், வறண்டதாகவும் மாறுதல், வியர்வை முற்றிலும் நின்று போகலாம். குழப்பம், பிரமைகள் அல்லது உணர்விழப்பு போன்ற மனநிலையில் மாற்றம் ஏற்படும், இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் வேகமாக இருக்கும், கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி ஏற்படும். இதை சரி செய்ய உடனடியாக பாதிக்கப்பட்டவரை நிழலான பகுதிக்கு அழைத்து செல்ல வேண்டும். ஆடைகள் இறுக்கமாக இருந்தால் அதை தளர்த்தவும். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
இதற்கு தாமதமாகிறது எனில் உடனடியாக ORS கரைசலை கொடுக்கலாம். இது உடல் இழந்த நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை வேகமாக ஈடுசெய்யும். ORS என்பது உப்பு மற்றும் சர்க்கரையின் சரியான அளவிலான கலவையாகும். இதை நீரில் சரியான அளவு கலந்து குடிக்க வேண்டும். இதன் மூலம் உடனடியான பாதிப்புகளை தவிர்க்கலாம்.
எனவே மாநாட்டில் பங்கேற்றிருக்கும் தொண்டர்கள் ORS-ஐ பவுடரை பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக்கொள்ளவும். அருகில் உள்ள மருந்தகங்களில் குறைந்த விலையில் இந்த பவுடர்கள் கிடைக்கின்றன.












Click it and Unblock the Notifications