வரிச்சியூர் செல்வத்தின் கை விரலில் தமிழக அரசு சின்னம்! 10 விரல் மோதிரங்களின் சிறப்புகள்! 204 பவுனாம்
மதுரை வரிச்சியூர் செல்வம் அணிந்திருக்கும் நகைகளின் மதிப்பு 204 சவரன்
மதுரை: மதுரை வரிச்சியூர் செல்வம் தனது கை விரல்களில் அணிந்துள்ள நகைகள் குறித்து கூறியுள்ளார்.
நடமாடும் தங்க நகைக் கடை என அழைக்கப்படுபவர் மதுரை வரிச்சியூர் செல்வம். இவர் எப்போது பார்த்தாலும் புதிய புதிய நகைகளுடன் காட்சி அளிப்பார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட முறுக்கு செயின் வாங்கி அணிந்து கொண்டிருக்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் கூட அவர் முகக் கவசத்தை 10 பவுன் தங்கத்தில் அணிந்திருந்தார். இவர் அண்மையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். இது குறித்து மதுரை போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இடது கை சுண்டு விரல்
இந்த வழக்கு தொடர்பாக வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியிருப்பதாவது: இடது கையில் சுண்டு விரலில் போட்டிருப்பது மயில் மோதிரம். தமிழ் கடவுள் முருகனின் வாகனம். மோதிர விரலில் போட்டிருப்பது மச்ச அவதாரம். நடுவிரலில் இருக்கும் மோதிரம் ஆமை. ஆள்காட்டி விரலில் இருப்பது பிள்ளையார். அதே விரலில் சிங்கம். கட்டை விரலில் போட்டிருப்பது கழுகு. இந்த கழுகுதான் நான்.

வலது கை கட்டை விரல்
வலது கையில் கட்டை விரலில் போட்டுள்ளது தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம். ஆள்காட்டி விரலில் இருப்பது பிடரியுடன் காணப்படும் சிங்கம், நடுவிரலில் அணிந்திருப்பது குதிரை. நான் எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பேன். ஒரு இடத்தில் நிற்க மாட்டேன். சுண்டு விரலில் இருப்பது படகு போன்றது. வாழ்க்கை ஒரு பயணம் என்பதை குறிப்பதற்காக போட்டிருக்கேன்.

204 பவுன்கள்
நான் போட்டிருக்கும் நகைகளின் மதிப்பு 204 பவுன்களாகும். கையில் உள்ள பிரேஸ்லெட் சிறுத்தை. கால்களில் கூட தங்கத்தில் தண்டை அணிந்திருக்கிறேன். எனக்கு ரஜினி, சூர்யா, விஜய் என எல்லாரையும் பிடிக்கும். அதிலும் மதுரையில் நடிக்க வந்தவர்களை மிகவும் பிடிக்கும். நான் பங்கு சந்தை போல் எல்லாருக்கும் உதவி செய்கிறேன். அதை குறிப்பிடும் வகையில் கழுத்தில் மாடு சின்னத்தை அணிந்திருக்கிறேன்.

400 பவுன்கள்
முன்பெல்லாம் நான் 400 பவுன் நகைகளை போட்டிருந்தேன். பிறகு அதையெல்லாம் கழற்றிவிட்டு எனது பேரன், பேத்திகளுக்கு கொடுத்துவிட்டேன். இந்த முறுக்கு செயின் மட்டும் 122 பவுன். இதை இந்தியாவில் யாரும் போட்டிருக்க மாட்டார்கள். எல்லாரும் சிறியதாக போட்டிருப்பார்கள். நான் பெரியதாக போட்டிருக்கிறேன். காதுகளில் எத்தனை இடங்களில் குத்துகிறோமோ அத்தனை நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

வாட்ச்
வாட்ச், கூலிங்கிளாஸ் எல்லாத்தையும் நான் காசு போட்டு வாங்க மாட்டேன். என் நண்பர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு வரும் போது எனக்கு கொண்டு வருவார்கள். தற்போது நான் ரவுடி தொழிலை விட்டுவிட்டு ஜாலியாக இருக்கிறேன். என்ன வேண்டுமானாலும் சாப்பிடுகிறேன். இரவு நேரத்தில் ஒரு முழு கோழியை தந்தூரி செய்து சாப்பிடுவேன்.

நரக வாழ்க்கை
ஜெயில் வாழ்க்கை யாருக்கும் கிடைக்கக் கூடாது. ஒரு கரண்டி குழம்புக்கு சூப்பிரண்டிடம் கெஞ்ச வேண்டும். எனது எதிரிக்கு கூட இந்த வாழ்க்கை கிடைக்க கூடாது, நான் போகாத ஜெயிலே இல்லை. ஒரு வாரத்திற்கு 10 நிமிஷம்தான் போனில் பேச முடியும். பிறகு ஒரு நாளைக்கு 10 நிமிஷம் கொடுத்தார்கள். அந்த போனில் கூட ஒட்டு கேட்பார்கள். காதலியிடம் கூட மனம் விட்டு பேச முடியாது. ஜெயில்தான் வாழ்க்கையிலேயே நரகம் ஆகும். கோழிக் குழம்பெல்லாம் ஜெயிலில் போடுவதாக சொல்றாங்க. ஆனால் அதில் வெறும் கோழியின் ஜவ்வு, கழுத்துதான் இருக்கும். சாம்பார் ஊற்றினால் இந்த இடத்தில் இருந்து அந்த இடத்திற்கு ஓடும்.

நான் நல்லவன்
ஜெயிலில் நான்தான் எல்லாருக்கும் வேலை கொடுப்பேன். எனக்கு சிகரெட், குடி, கஞ்சா உள்ளிட்ட பழக்கம் இல்லை. அதனால் என்னிடம் சொல்லி ஜெயிலர் மற்றவர்களை வேலை வாங்க சொல்வார். வேலை செய்தால் நான் அவர்களுக்கு பீடி கொடுப்பேன். 56 வாட்டி ஜெயில், 10 குண்டாஸ் என் மேல் இருக்கு. இதுக்கு மேல என்னை ஜெயிலுக்கு கூட்டிட்டு போனால் நான் தூக்கு போட்டு செத்துடுவேன். எனக்கு காதலியெல்லாம் கிடையாது. என் மனைவிதான் எனக்கு காதலி என வரிச்சியூர் செல்வம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications