"துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி" பயணியிடம் வந்த விமர்சனம்.. மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம் என்று விமர்சித்த நபரால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம் என்று அவதூறாக விமர்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்ததாக விமர்சித்த நபரை, காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில் விமானம் வாயிலாக மதுரை வந்தடைந்தார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி
அதில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவனியாபுரம் பைபாஸ், வில்லாபுரம், தெற்கு வாசல் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம்
இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகளில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, மாலை சிவகங்கையில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

துரோகத்தின் அடையாளம்
முன்னதாக எடப்பாடி பழனிசாமியுடன் விமானத்தில் பயணித்த ஒருவர், அவரை அவதூறாக பேசியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்த போது, துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி, சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர் என்று பேசியுள்ளார். அவர் பேசிக் கொண்டிருந்த போது, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரின் செல்போனை பிடுங்கியுள்ளார். அதேபோல் அவர் பேசியதை ஃபேஸ்புக்கிலும் லைவ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

யார் அவர்?
முதல் கட்ட விசாரணையில் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம். வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரிய வந்துள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications