100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்!
மதுரை: சிவகங்கை ஆகாஷ் உடலை இன்று மாலைக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்.. தவறினால், நாளை காவல்துறையே அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆகாஷின் பெற்றோருக்கு கெடு விதித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தின்போது ஆகாஷை பிடிக்க முயன்றபோது, அவர் மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் அவருடைய காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.

ஆனால், காவல்துறை சித்திரவதையால் ஆகாஷ் உயிரிழந்ததாக கூறி, அவருடைய உடலை ஆகாஷின் உறவினர்கள் வாங்க மறுத்தனர். சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆகாஷ் இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலத்தில், போலீசார் தனது கண்ணைக் கட்டி, காலுக்கு இடையே கல்லை வைத்து அடித்துக் காலை உடைத்ததாகவும், சாதிய ரீதியாக வன்மத்துடன் நடத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில், உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், வலது கால் எலும்புகள் முறிந்து, தசை மற்றும் ரத்த நாளங்கள் சேதமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின் பேரில், இந்த வழக்கு கொலை வழக்கு மற்றும் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டு தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய திருப்புவனம் ஆய்வாளர் திலீபன் மற்றும் மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன் உட்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்களைக் கைது செய்யக் கோரி, 100 நாட்களுக்கும் மேலாக ஆகாஷின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வந்த நிலையில், உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, விசாரணை அதிகாரி முடிந்தவரை விசாரணையை விரைவாக முடித்து, சட்டப்படி அதிகார வரம்புக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, "மனுதாரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போது வரை ஆகாஷின் உடலைப் பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இறந்தவருக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். ஆகவே ஆகாஷின் பெற்றோர் இன்று மாலை 5 மணிக்குள் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் நாளை காவல்துறையே உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை நாளைக்கு (ஜூன் 16) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications