அதெல்லாம் அண்ணாமலையோ நானோ தீர்மானிக்க முடியாது.. மதிமுக துரை வைகோ பதிலடி!
மதுரை: மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மின் 236 ஆவது பிறந்தநாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வில் மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாஜகவை தோற்கடிப்போம்
பின்னர் அவர் கூறுகையில் தியாகம், வீரத்தால் நீங்காத புகழைப் பெற்றவர் விடுதலை விதையை முதலில் விதைத்தவர் வீரபாண்டியன் கட்டபொம்மன். அவரது புகழ் வாழ வேண்டும். "இந்த மண்ணுக்கு எல்லா நிறமும், மக்களும் தேவை. கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்கள் சேர்ந்து பாஜகவை தோற்கடிப்போம் என திமுக எம்பி ஆ ராசா தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்
அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கையில் எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் எங்களை தோற்கடிக்க முடியாது" என்கிறார். இதை அவரோ நானோ தீர்மானிக்கவே முடியாது, மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை
தேசிய பேரிடர் பாதிப்புக்கென 6 மாநிலங்களுக்கு ரூ 3000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு ரூ 6000 கோடி நிதியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார். இதற்கு இதுவரை பாஜகவிடம் இருந்து பதில் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றக் குழு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டும் உடனே ஒதுக்கவில்லை.

பாஜக ஆளும் மாநிலங்கள்
எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான முறையில் தேவையான நிதியை ஒதுக்க வேண்டுமே தவிர, பாஜக ஆளும் மாநிலங்களுக்கென தனிப்பட்ட எண்ணம், பாரபட்சம் இருக்கக் கூடாது. பிரதமராக தமிழகத்திற்கு வரும் நரேந்திர மோடியை வரவேற்கிறோம். தமிழகத்திற்கான திட்டம், நிதியை மறுத்தால் எதிர்ப்போம். தமிழகத்தை மாற்றான் தாய் போல் மத்திய அரசு நடத்தக் கூடாது என்றார் துரை வைகோ.












Click it and Unblock the Notifications