தங்க நாணயங்களை 3 நாட்களாக வாரி இறைத்த அமைச்சர் மூர்த்தி! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ருசிகரம்!
மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என கடந்த 3 நாட்களாக ஜல்லிகட்டு போட்டிகளில் தங்க காசுகளை வாரி இறைத்து வீரர்களை உற்சாகப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் வெறும் தங்க நாணயங்களை மட்டும் வழங்கிய மூர்த்தி, இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தங்க மோதிரங்களையும் பரிசாக வாரி இறைத்திருக்கிறார்.
கணக்கு வழக்கில்லாமல் தங்கமழை பொழிந்த அமைச்சர் மூர்த்தியால், வீரர்கள் போட்டியில் உற்சாகமாக களமாடினர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை காலை 7 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்த மேடையில் அமர்ந்து போட்டியை ரசித்து வந்தார். இதையடுத்து அவசரப் பணி ஒன்றின் காரணமாக காலை 11.30மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற திடலில் இருந்து உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டுவிட்டார்.

தங்க மோதிரம்
இதனிடையே முன்னதாக வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்க நாணயங்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார். பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியின் ஏற்பாட்டில் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. தங்க நாணயமானது குறைந்தது ஒரு கிராமாவது இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் வெறும் தங்க நாணயங்களை மட்டும் வழங்கிய மூர்த்தி, இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தங்க மோதிரங்களையும் பரிசாக் வாரி இறைத்திருக்கிறார்.

முதல்வர் படம்
கருப்பு சிவப்பு நிறத்தில் கல் வைத்து அதில் முதல்வர் ஸ்டாலின் படமும், உதயநிதி ஸ்டாலின் படம் இடம்பெற்ற வகையில் தங்க மோதிரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது. மோதிரத்தை பொறுத்தவரை குறைந்தது அரை பவுனாவது இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை கடந்தாண்டும் இதேபோல் தங்க நாணயங்களை பரிசாக கொடுத்து களமாடிய வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

கார் -பைக்குகள்
தங்க காசுகள், தங்க மோதிரங்கள் இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரில் அதிக காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கு நிசான் மேக்னைட் காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் 2 பைக்குகளையும் வழங்குகிறார் அமைச்சர் மூர்த்தி.












Click it and Unblock the Notifications