பிடிஆரின் தாய்க்கு புதிய பொறுப்பு.. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக நியமித்த அறநிலையத்துறை
மதுரை: தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி பழனிவேல் ராஜனை, மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்காராக கருமுத்து தி கண்ணன் என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக இந்த பொறுப்பை வகித்து வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த மே மாதம் அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கோவில் தக்காராக இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை செயல்பட்டு வந்தார். இதற்கிடையே தான் மீனாட்சியம்மன் கோவிலில் தக்கார் பதவியை பெற பலரும் முயன்று வந்தனர். குறிப்பாக தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
இதற்கிடையே தான் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் க மணிவாசன் 5 பேரை கோவில் அறங்காவலர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை அண்ணாநகரை சேர்ந்த மூக்கணம்பலம் என்பவரின் மகன் பிகேஎம் செல்லையா, மதுரை காந்திநகர் சூமேக்கர் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகள் சுப்பலட்சுமி ஆகியோர் அறங்காவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சொக்கிகுளம் வல்லபாய் ரோடு சுப்பராயன் என்பவரின் மகள் ருக்மணி பழனிவேல்ராஜன், மதுரை கே.கே.நகர் ஏரிக்கரைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மு சீனிவாசன், மதுரை அரசரடி ஹார்விநகர் 4வது தெரு எம் சேகர் மகள் எஸ் மீனா ஆகியோரும் கோவில் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 5 அறங்காவலர்களில் ருக்மணி பழனிவேல் ராஜன் என்பவர் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ஆவார். இவருக்கு வயது 83 ஆகிறது. இவர் ஏற்கனவே கோவிலில் அறங்காவலர் உறுப்பினராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இந்நிலையில் தான் மீண்டும் அவர் அறங்காவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மற்றொரு நபரான எஸ் மீனா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்எம் அன்புநிதியின் மனைவியாவார். பிகேஎம் செல்லையா என்பவர் மதுரை கட்டுமான நிறுவனர் பி.கே.மூக்கன் அம்பலத்தில் மகனாவார். இவர் இதற்கு முன்பு கோவில் அறங்காவலராக பொறுப்பு வகித்து அனுபவம் கொண்டவர். மற்றொருவரான மு சீனிவாசன் மதுரை கேகே நகரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையின் டாக்டராவார்.
தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள அறங்காவலர்களின் பதவிக்காலம் என்பது 2 ஆண்டுகளாகும். இந்த பதவிக்காலம் என்பது அவர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து கணக்கீடு செய்யப்படும். மேலும் அறங்காவலர் நியமனம் தொடர்பான அரசாணை வெளியான அடுத்த 30 நாட்களுக்குள் 5 அறங்காவலர்களும் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதியாகும். இதன்மூலம் இந்த 5 பேரில் ஒருவர் அறங்காவலர் தலைவராக தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications