மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை கல்லை கொடுக்க மாட்டேன்! மீண்டும் செங்கல்லுடன் உதயநிதி!
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய செங்கலை இன்னும் பத்திரமாக வைத்துள்ளதாகவும் மருத்துவமனையை கட்டி முடிக்கும் வரை அதை கொடுக்க மாட்டேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி அவர் நேற்று தஞ்சை சத்யா மைதானத்தில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அது போல் டீக்கடை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

முதல்வர் ஸ்டாலினுடன் மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அந்த வகையில் எல்லா தலைவர்களுக்கு பரப்புரைக்கு சென்றுள்ள நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.
மதுரையில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். அந்த கல்லை இன்னும் பத்திரமாகத்தான் வைத்துள்ளேன். நீங்கள் மருத்துவமனையை கட்டி முடிக்கும் வரை அந்த கல்லை கொடுக்கவே மாட்டேன்.
வல்லரசு எப்போது: 2020ஆம் ஆண்டு நாட்டை வல்லரசாக்குவேன் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் இப்போது 2047 ஆம் ஆண்டு நாட்டை வல்லரசாக்குவேன் என கூறி வருகிறார். பிரதமர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால் ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு ரூ 5 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை அபரிமிதமான மழையும் பாதித்தது. அப்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவில்லை. மழை வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் ரூ 37 ஆயிரம் கோடி கேட்டார்.
நிதியமைச்சர்: ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, "நாங்கள் என்ன ஏடிஎம் மெஷினா" என கேட்டு, வெள்ள பாதிப்புக்காக தமிழகத்திற்கு 1 ரூபாயை கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. இவ்வாறு உதயநிதி பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது எய்ம்ஸ் செங்கல்லை ஏந்திக் கொண்டு சென்றார்.
இது பெரும் திருப்புமுனையை திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஏற்படுத்தி தந்தது. அதன் விளைவாக தமிழகத்தில் திமுகவும் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து 38 இடங்களில் வென்றன. அதிமுக ஒரு இடத்தில் வென்றது. மதுரை எய்ம்ஸை போல் மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணங்களுக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
உதயநிதி பிரச்சாரம்: எனவே உதயநிதிக்கு பிரச்சாரத்திற்கு செல்லும் போது எய்ம்ஸ் செங்கல்லை எடுத்துச் செல்வாரா இல்லை ஒற்றை ரூபாய் நாணயத்தை எடுத்துச் செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் அவர் மீண்டும் எய்ம்ஸ் செங்கல்லையே கொண்டு சென்றுள்ளார். கடந்த முறை அடிக்கல் நாட்டிய செங்கல்லை உதயநிதி திருடிவிட்டார் என்று கூட பாஜக, போலீஸில் புகார் கொடுத்திருந்தது.
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம், கோ.புதுப்பட்டி கிராமத்தில் 90 ஹெக்டேர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியிருந்தார். ஆனால் 5 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை. 2026 க்குள் கட்டி முடிப்போம் என்று மத்திய அரசு சொல்லி வருகிறது. ஆனால் கட்டுமான பணிகள் ஏதும் தொடங்கவில்லை.












Click it and Unblock the Notifications