மோடியின் நாடாளுமன்ற பேச்சில் சொல்லாமல் தவிர்த்த ஒரு வார்த்தையால் உண்மை விளங்கிவிட்டது: சு.வெங்கடேசன்
மதுரை: இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் உரிமை கொண்டாடி வருகிறார். இதை மத்திய அரசு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். பிரதமர் மோடி இது குறித்து விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், நாடாளுமன்ற உரையில் டிரம்ப் குறித்து பிரதமர் பேசவில்லை. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
தனது எக்ஸ் பக்கத்தில், "ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நான் தான் முடித்து வைத்தேன் என டிரம்ப் 29 முறை கூறியுள்ளார். அதை ஆளுங்கட்சி மறுப்பதாக இருந்தால் 'டிரம்ப் சொல்வது பொய்' என்று பிரதமரை ஒருமுறையாவது சொல்லச்சொல்லுங்கள் என கேட்டோம்.

பிரதமர் தனது 105 நிமிடம் பேச்சில் டிரம்ப் என்ற பெயரையே சொல்லவில்லை. மக்களவையில் விவாதம் முடிந்தது. மக்களுக்கு உண்மை விளங்கியது" என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் மூன்றாம் நாடுகள் தலையிடாமல் இருந்து வந்தன. மட்டுமல்லாது நான் சொல்லிதான் சண்டையே நின்றது என்று டிரம்ப் கூறி வருகிறார். இந்தியா தொடங்கிய போரை எப்படி அமெரிக்கா முடிக்க முடியும்? போர் நிறுத்தம் குறித்து முதல் அறிவிப்பு மத்திய அரசு தரப்பிலிருந்து வராமல் டிரம்பிடமிருந்து வந்தது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிரம்பின் உரிமை கோரலை மத்திய அரசு தரப்பில் சில அதிகாரிகள் மறுத்து வந்தாலும், பிரதமர் இதை நேரடியாக மறுக்கவில்லை. இப்படி இருக்கையில் பிரதமரின் நாடாளுமன்ற உரை கவனம் பெற்றிருக்கிறது.
முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பங்கேற்றிருந்த சு.வெங்கடேசன் பேசியதாவது, "தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர், சோழர்களுடைய போர்த் திறனையும் 'ஆபரேசன் சிந்தூரை'யும் இணைத்துப் பேசியிருக்கிறார். நான் ஒரு வரலாற்று மாணவனாக, வரலாற்றை அறிந்த எழுத்தாளனாக சொல்கிறேன்.. இந்தியாவில் ஒரு பேரரசு, கடல்கடந்த வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்றால், அது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் சோழப் பேரரசு மட்டும்தான்.
அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? ராஜராஜனோ, ராஜேந்திர சோழனோ, அவன் தொடங்கிய போரை அவன்தான் முடித்து வைத்தானே தவிர, பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்துவைக்கவில்லை. மோடி தொடங்கிய 'ஆபரேசன் சிந்தூரை', தான் முடித்து வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 25 முறை கூறினார். ராஜராஜன் துவங்கிய போரை, பக்கத்து நாட்டு மன்னன் முடித்து வைத்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜராஜ சோழன்.
தோல்வியை மறைக்க கடவுள் பெயர்
ராமன் எப்படி இலங்கையின் மீது படையெடுத்து ராவணனைக் கொன்றாரோ, அப்படி மோடி இந்த படையெடுப்பை நடத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார். இன்னொரு அமைச்சர், சிசுபாலனின் தலையை வெட்ட சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணன் பயன்படுத்தியதைப் போல பிரதமர் படைகளைப் பயன்படுத்தினார் என்றார்.
உங்கள் தோல்விகளை மறைக்க கடவுள்களை இவ்வளவு மலினமாக பயன்படுத்துவது நியாயமா? ஆத்திகவாதிகளின் மனம் புண்படாதா? இந்துக்களின் மனம் புண்படாதா என்பதை வேதனையோடு கேட்கிறேன்.
துல்லிய தாக்குதல்;
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 29, 2025
“ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நான் தான் முடித்து வைத்தேன்” என டிரம்ப் 29 முறை கூறியுள்ளார்.
அதை ஆளுங்கட்சி மறுப்பதாக இருந்தால் “டிரம்ப் சொல்வது பொய்” என்று பிரதமரை ஒருமுறையாவது சொல்லச்சொல்லுங்கள் என கேட்டோம்.
பிரதமர் தனது
105 நிமிடம் பேச்சில்
டிரம்ப் என்ற… pic.twitter.com/PghwviEOZy
சோபியா குரேஷி, ஆதில் ஷா-வுக்கு அங்கீகாரம்
ராஜ்நாத் சிங் பேசுகையில் மறந்துகூட கர்னல் சோபியா குரேஷிக்கு நடந்த அவமதிப்பை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மத்தியப் பிரதேச பாஜக எம்.பி விஜய் ஷா அவமரியாதையாக பேசியிருந்தார்.
பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்தான் குதிரை ஓட்டியான ஆதில் ஷா. அந்த ஆதில் ஷா-வின் வீரத்தைப் பற்றி நீங்கள் ஒருமுறை கூட பேசவில்லை. ஒரு ஆதில் ஷா இல்லை, ஆயிரம் ஆதில் ஷா-க்கள் இருக்கிறார்கள் காஷ்மீரில். அந்த காஷ்மீர் மக்களின் ஒருமைப்பாட்டை அங்கீகரித்து ஒரு வார்த்தை பேசவில்லை. வேதனையோடு சொல்கிறோம். மத ரீதியான வேறுபாடுகளை பயங்கரவாதத்தை வைத்து அதிகரிக்க முடியாது என்பதுதான் இந்தியா சொல்லும் செய்தி. அந்த இந்தியாவை உங்களால் ஒருபோதும் பிளக்கவோ, பிரிக்கவோ முடியாது என்று சொல்லி முடிக்கிறேன்" என பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications