இதுதான் மனிதம்! மதுரை சித்திரை திருவிழாவில் முஸ்லீம்களின் சேவை! 26 ஆண்டுகளை கடந்து மத நல்லிணக்கம்
மதுரை: மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் நீர் மோர், ரோஸ்மில்க் உள்ளிட்ட நீராகாரங்களை வழங்கி வருகிறார்கள்.
சுமார் 26 ஆண்டுகளாக இவர்கள் இந்த சேவையை செய்து வருகிறார்கள். இது பார்ப்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதம் தழைத்தோங்குகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணமாக எதை சொல்ல முடியும்?

தூங்கா நகரம், கோயில் நகரம் என அழைக்கப்படும் மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. பொதுவாக குறிப்பிட்ட மதத்தின் திருவிழாக்களில் அந்தந்த மதத்தினர் மட்டுமே பங்கேற்பர். ஆனால் இந்த சித்திரை திருவிழாவில் இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டு தங்களது திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள்.
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி திருத்தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் தனித்தனி தேர்களில் மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள். அது போல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23 ஆம் தேதி, நாளை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக மதுரை மாவட்டத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அழகர் ஆற்றில் இறங்கும் போது பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமண நீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்தள் பீய்ச்சி அடிப்பார்கள். இப்படியாக இந்த நிகழ்வு நடைபெறும்.
இதற்காக கள்ளழகர் இன்று அழகர்மலையிலிருந்து மதுரைக்கு வருவார். அவருக்கு எதிர் சேவை உற்சவம் நடைபெறும். இதையடுத்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குவார். இந்த திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி திருத்தோரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் உள்ளிட்டவை முக்கிய நிகழ்வுகளாகும்.
இதை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இந்த நிகழ்வுகளை காண வந்துள்ளார்கள். தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் மீனாட்சி கோயிலை சுற்றி ஆங்காங்கே தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் நீர் மோர் பந்தல் வைத்துள்ளனர். அங்கு பக்தர்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழத் துண்டுகள் , தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த விழாவில் இஸ்லாமியர்களும், மீனாட்சி கோயிலுக்கு சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர், வாட்டர் பாட்டில்கள், ரோஸ்மில்க் ஆகியவற்றை கொடுத்து வருகிறார்கள். சுமார் 26 ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து இந்த சேவையில் ஈடுபட்டிருந்த ஒரு இஸ்லாமியர் கூறுகையில் என் பெயர் முகமது சலீம். நாங்கள் 26 ஆண்டுகளாக நீர் மோர், ரோஸ்மில்க் ஆகியவற்றை மக்களுக்கு கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு மன நிறைவை கொடுக்கிறது, சாதி , மதத்திற்கு அப்பாற்பட்டு, மனிதம், மனிதநேயம்தான் முக்கியம் என்ற இலக்கை நோக்கி நாங்கள் இவ்வாறு பயணிக்கிறோம் என்றார். அது போல் இஸ்லாமியர்களின் விழாக்களுக்கு இந்துக்கள் உதவுவது, இந்துக்களின் விழாக்களுக்கு கிறிஸ்துவர்கள் உதவுவது, இந்துக்களின் திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சீர் கொண்டு செல்வது உள்ளிட்டவைகளால் தமிழகத்தில் மத நல்லிணக்கம் சிறப்பாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications